ஹார்வர்ட் பல்கலை... மாணவர் விசா உரிமை ரத்து.. ட்ரம்ப் அரசு அதிரடி!
ஜி.எஸ்.பாலமுருகன்
அமெரிக்காவின் உயர்கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர் சேர்க்கை உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மாணவர்களை எப்படி பாதிக்கும் என்று பார்க்கலாம். அமெரிக்காவில் கல்வி மற்றும் குடியுரிமை கொள்கைகள் ஒன்றாக மோதும் முடிவு ஒன்று, உலகளாவிய மாணவர்கள் வருகையில் புதிய தடைகளை உருவாக்குகிறது. ட்ரம்ப் அரசின் உள்துறை அமைச்சர் கிரிஸ்டி நோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் சேர்க்கை உரிமையை ரத்து செய்துள்ளதாக அறிவித்தார். இதனால் மாணவர்கள் எஃப்-1 மற்றும் எம்-1 விசாக்கள் பெற முடியாது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இனி சர்வதேச மாணவர்களை சேர்க்க முடியாது. மேலும் தற்போது ஹார்வர்டில் கல்வி பயிலும் சுமார் 6,800 சர்வதேச மாணவர்கள் தங்கள் சட்டப்பூர்வ நிலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கத் தவறியது, ஹமாஸ் ஆதரவு மற்றும் வெறுப்பான கொள்கைகளைப் பின்பற்றுகிறது என ட்ரம்ப் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில், பல்கலைக்கழகம் 72 மணி நேரத்துக்குள் சர்வதேச மாணவர்களின் ஒழுக்கக்கேடான குற்றங்கள், போராட்ட செயல்பாடுகள் பற்றிய ஆடியோ, வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்காவிட்டால், சேர்க்கை உரிமையை மீண்டும் பெற முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டித்துள்ளது. பல்கலைக்கழகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்தியாவில் இருந்து ஹார்வர்ட் உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2023-24 கல்வியாண்டில், அமெரிக்காவில் 3 லட்சத்து 31ஆயிரத்து 602 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்றனர். இந்நிலையில், புதிய நடவடிக்கை மாணவர்களின் எதிர்கால கல்வி திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மீதான நடவடிக்கை கல்வி சுதந்திரம் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மீது கேள்வி எழுப்புகிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் குடியுரிமை ஆதரவாளர்கள், இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் எனக் கண்டித்துள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் மற்றும் அமெரிக்காவின் உயர்கல்வி அமைப்புகளின் எதிர்காலத்தைப் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்புகிறது.