ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் தோன்றிய அதிசய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பாராசெலீன் எனப்படும் ஒளியியல் மாயை காரணமாக நிகழ்ந்தது. இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் - திவ்யா
பொதுவாக கவிஞர்களும் காதலர்களும் நிலவை ரசித்து கவிதை எழுதுவதை தொன்றுதொட்டே வழக்கமாக கொண்டுள்ளனர். ஒற்றை நிலவிற்கு இத்தனை மவுசா என்பது போலத்தான் இருக்கும். ஆனால், ஜாக்பாட் அடித்தது போல ஒரே நேரத்தில் வானில் நான்கு நிலவுகள் தோன்றியதுபோல வெளியான வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி சாத்தியம், காலம் காலமாக ஒற்றை நிலவு தானே இருக்கிறது, என்ன நடந்தது என கேள்வி எழலாம். என்னவென்று பார்ப்போம்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வானத்தில் 4 நிலவுகள் ஒரே நேர்கோட்டில் தோன்றி உள்ளது. இதனைக்கண்ட மக்கள் எல்லோரும் இது கர்ப்பனையா உண்மையா என ஆச்சரியப்பட்டுள்ளனர். எப்போதுமே ஒரே நிலவாக பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென நான்கு நிலவுகள் வானில் தோன்றினால் யாருக்கு தான் அது அதிர்ச்சியாக இருக்காது. இதனை அடுத்து சமூக ஊடகங்கள் விரைவாக படங்கள் மற்றும் வீடியோக்களால் நிரம்பின.
சரி உண்மையில் நான்கு நிலவு போல காட்சி அளிப்பதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள் என்றால், இந்த நிகழ்வை ஒரு பாராசெலீன் என்று விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர். இது போலி நிலவு ( mock moon ) என்றும் அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள பனிக்கட்டி படிகங்கள் வழியாக நிலவொளி ஒளிவிலகல் அடைந்து "போலி நிலவுகளை" உருவாக்குவதால் ஏற்படும் ஒளியியல் மாயை தான் இதற்கு காரணம்.
இந்த படிகங்கள் மெல்லியதாகவும், தட்டு வடிவமாகவும், அறுகோண வடிவமாகவும், பூமியின் மேற்பரப்பிற்கு மேலே உயரமாக மிதக்கின்றன. ஒளி துல்லியமான கோணங்களில் படிகங்களுக்குள் நுழையும் போது, அது வளைந்து வெளிப்புறமாக விலகுகிறது. இந்த ஒளிவிலகல் சந்திரனின் இருபுறமும் பிரகாசமான புள்ளிகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக நான்கு நிலவுகள் போல காட்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
பாராசெலீனாக்கள் பொதுவாக சந்திரனில் இருந்து சுமார் 22 டிகிரி தொலைவில் தோன்றும் என்று நாசா விளக்குகிறது. அவை பொதுவாக மங்கலானவை என்பதால், சாதாரண சூழ்நிலைகளில் இதை கவனிப்பது கடினம். தெளிவான வானம், குளிர்ந்த வெப்பநிலை மற்றும் பிற பல்வேறு காரணிகள் இதனை கண்களில் காணும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பனிக்கட்டி படிகங்கள் லேசாக அசைந்து கொண்டிருந்ததால் இந்த குறிப்பிட்ட காட்சி தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், முற்றிலும் ஒளியியல் சார்ந்தது என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.