அமெரிக்காவின் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தலைநகர் கடுமையாக சேதமடைந்துள்ளன..இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ரஷ்யா நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் கடும் சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வாகனங்கள் தீ பிடித்து எரிந்து சாம்பலாகின... அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் மார்க்கெட் பகுதிகளிலும் அதிகமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன..
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் உக்ரைன் போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்தனர். இரு தரப்பும் ட்ரோன்கள் மூலம் மாறிமாறி தாக்கிக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதில் இரு தரப்பிலும் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப்படை கூறுகையில், ரஷ்யா ஒன்பது ஏவுகணைகள் மற்றும் 62 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் நான்கு ஏவுகணைகள் மற்றும் 50 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது . அதேசமயம் ரஷ்யாவில் தங்கள் வான் பாதுகாப்பு படையினர் 121 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் ரஷ்யத் தலைவர் தெளிவான முடிவை எடுக்காவிட்டால், இனி விளாடிமிர் புடினுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் திட்டமிட மாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்..
ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து உக்ரைன் நகரங்களைப் பாதுகாப்பதில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளின் முக்கியத்துவத்தை இந்தத் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
"இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும், ரஷ்யா உக்ரைனில் சுமார் 770 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 50க்கும் மேற்பட்ட 'கின்சல்' ஏவுகணைகளையும் ஏவியுள்ளது" என்று ஜெலென்ஸ்கி தனது டெலிகிராமில் கூறினார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் பயன்படுத்தப்படும் தரை சார்ந்த வான் பாதுகாப்பு அமைப்பான இந்த பேட்ரியாட் அமைப்புகள் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிப்பதில் திறம்பட செயல்படுவதை நிரூபித்துள்ளன..
முன்னதாக ரஷ்யா மீது தடைகளை மேலும் அதிகரிக்க அமெரிக்காவை கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை அளிக்கவும் 25 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..