அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கொள்கை, விசா கட்டுப்பாடுகள், வரிவிதிப்பு ஆகியன இதில் அடக்கம். இந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு அளித்த விருப்ப நடைமுறை பயிற்சித் திட்டத்தை ரத்து செய்யும் மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டம் சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகு, அவர்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதியளிக்கின்றது. அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் பட்டப்படிப்பு மேற்கொள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்.1 விசா வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடிந்தபின்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி செயல்முறை பயிற்சி என்ற பெயரில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி அதிகபட்ச பயனாளிகள் இந்திய மாணவர்களாகவே உள்ளனர். 2023-24 கல்வியாண்டில் 97,556 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது இந்த திட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளது. இதனால் மூன்று லட்சம் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாணவர்கள் உடனடியாக எச்1பி பணி விசாவைப் பெற வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இதனால் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், இந்த விசா ஆண்டுக்கு 85,000 வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே போட்டி அதிகமாகி உள்ளது. முன்னதாக கார்னெல், கொலம்பியா, யேல் போன்ற பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. திரும்ப அமெரிக்காவுக்கு வர அனுமதி மறுக்கப்படலாம் என்ற காரணத்தால் பல மாணவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.