அப்துல் அர்பாத்
அப்துல் அர்பாத் முகநூல்
உலகம்

மற்றொரு இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம மரணம்! மார்ச் 7ல் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-கடத்தி கொலை?

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அர்பாத் (25). இவர் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெறுவதற்காக மே 2023 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தங்கி படித்து வந்துள்ளார்.

இவரை கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் காவல்நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளனர். இதனால் மாணவரை தேடும் தீவிர பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது x வலைதளப்பக்கத்தில் மாணவர் உயிரிந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த பதிவில், “தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முகமது அப்துல் அர்பாத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார். மாணவனின் குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக இதுகுறித்து கடந்த மாதம் மாணவரின் தந்தை தெரிவிக்கையில், “மார்ச் 7 ஆம் தேதி முதல் அவனை காணவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது தெரியாத எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை விடுவிக்க வேண்டுமென்றால் 1,200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால் அவருடைய சிறுநீரகத்தை மாஃபியா கும்பலுக்கு விற்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். மிரட்டல் விடுக்கப்பட்டு மாணவர் காணாமல்தான் போயுள்ளார் என கூறப்பட்ட நிலையில் அவரது இறப்பு செய்தி வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் மாணவரின் குடும்பத்தினரிடம் பெரும் அதிர்ச்சியையும், மீளாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இந்திய அல்லது இந்திய வம்சாவளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட 11வது துயரச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.