மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad), குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தண்ணீர் கிடைப்பதில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, அவ்வப்போது சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை, சாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கால்நடைகளுக்கு கிரேடா (Kreda) சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தண்ணீர் கொடுக்கச் சென்றுள்ளர். அப்போது, அவருக்கும் அங்கிருந்த குகா (Kuka) சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கிரேடா சமூகத்தைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில், குகா சமூகத்தைச் சேர்ந்த நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், ஹட்ஜர்-லாமிஸ் (Hadjer-Lamis) மற்றும் பார் எல் கசல் (Bahr El-Ghazal) ஆகிய இரண்டு மாகாணங்களின் எல்லைப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறை தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டு, தலைநகர் என்ஜாமேனாவுக்கு (N'Djamena) அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சாட் நாடு காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஐ.நா.வால் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு தண்ணீருக்கான அணுகல் சமமாக இல்லாததுடன், நீர், நிலம் மற்றும் கால்நடை மேய்ச்சல் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி மோதல்களாக வெடிக்கின்றன.
ஐ.நா.வின் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சாட்டில் 10 சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்களுக்கே பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து கிடைக்கும் வசதி இருந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு சாட்டில் கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 44 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் தண்ணீருக்காக 25 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.