இந்தியாவில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், கப்பலில் இருந்த 24 பேரில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 22 மாலுமிகளைத் தேடும் பணியில் 2வது நாளாக இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்த பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி. ஓஷன் வின்னர் (MV Ocean Winner) என்ற சரக்குக் கப்பல் 1,700 டன் இருப்புத் தாதுவை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூரை நோக்கி பயணித்தது.
இந்த நிலையில், நேற்று காலை கடற்கரையில் இருந்து சுமார் 230 நாட்டிகல் மைல் தொலைவில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. காவல்துறை அளித்த தகவலின்படி, கப்பலில் மொத்தம் 24 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சீனர்கள், 3 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, அருகில் சென்ற எம்.டி. ஐசோபோஸ் (MT Aisopos) என்ற வணிகக் கப்பல் இரண்டு உயிர்காக்கும் படகுகளில் இருந்த இரண்டு மாலுமிகளை மீட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மீதமுள்ள 22 மாலுமிகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் தான், அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல்படையின் மூன்று கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கடற்பகுதியில் உள்ள மற்ற வணிகக் கப்பல்களுக்கும் தேடுதல் பணிக்கு உதவுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் எதனால் மூழ்கியது என்பதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், 22 மாலுமிகளை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.