\
Japan Earthquake
Japan EarthquakeReuters

மீண்டும் மீண்டுமா.? ஜப்பானை தாக்கிய இயற்கை பேரிடர்.. புயலுக்கு பின் அடுத்த சோகம்!

ஜப்பானில் கடந்த ஜூன் மாதம் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு மற்றொரு இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது.
Published on

உலகில் அதிக அளவு இயற்கை பேரிடர்களை சந்திக்கும் நாடு என்றால் அது ஜப்பான்தான். பசிபிக் பெருங்கடலின் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் (Ring of Fire) ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு அதிகளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகின்றன.

அதாவது, ஜப்பானில் ஆண்டுதோறும் சராசரியாக 1,500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போல உலகில் உள்ள தீவிரமான எரிமலைகளில் 10% ஜப்பானில்தான் அமைந்துள்ளன. இது போதாது என ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பசிபிக் பெருங்கடலில் உருவாகும் பல சக்திவாய்ந்த புயல்கள் ஜப்பானை நேரடியாகத் தாக்குகின்றன.

Ring of fire
Ring of fireReuters

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஜங்மி' (Jangmi) என்ற புயல் ஜப்பானின் கடற்கரையோட நகரங்களை தாக்கியது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஏராளமான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த பாதிப்பில் இருந்து ஜப்பான் மீண்டு வரும் நிலையில், தற்போது வடகிழக்கு மற்றும் கிழக்கு ஜப்பான் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே புரட்டி போட்டுள்ளது. சுமார் 70 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோ உட்படப் பல பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின.

இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறித்துடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்றாலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சேதமடைதல், மின்கட்டமைப்புகள் பாதிப்பு என பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள டோக்காய் 2 (Tokai No. 2) அணுமின் நிலையத்தில் உடனடியாகப் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அணு உலைகளில் எந்தவிதப் பாதிப்பும் அல்லது கதிர்வீச்சுப் கசிவும் ஏற்படவில்லை என்றும், அனைத்து அமைப்புகளும் பாதுகாப்பாக இயங்குவதாகவும் தெரியவந்தது.

எனினும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, அடுத்த ஒரு வாரத்திற்கு அதே பிராந்தியத்தில் மீண்டும் சக்திவாய்ந்த தொடர் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக அடுத்த 2-3 நாட்களுக்கு மக்கள் கவனமாகவும், கனமான பொருட்கள் தலைமேல் விழாதவாறு பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Japan Earthquake
கடலுக்கு அடியில் புவியியல் மாற்றம்.. வங்காள விரிகுடாவில் நிலநடுக்க அபாயம்.. ஆய்வில் அதிர்சித் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com