hormuz web
உலகம்

ஹார்முஸில் காத்திருக்கும் 2,000 கப்பல்கள்.. 'உயிரைக் காப்பாற்றுங்கள்' - கதறும் மாலுமிகள்.!

மத்திய கிழக்கில் போர் தொடர்வதால், ஹார்முஸ் ஜலசந்தியில் சுமார் 20,000 மாலுமிகள் கப்பல்களில் சிக்கித் தவிக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் இது போன்ற ஒரு நிலைமை முன்னெப்போதும் இல்லாததாக பார்க்கப்படுகிறது

PT WEB

பிப்​ர​வரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்ரேலும் இணைந்து தாக்​குதலைத் தொடங்​கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால், சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Hormuz map

ஈரானின் அச்சுறுத்தல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நெரித்துக்கொண்டிருக்க, மாலுமிகளின் உயிர்கள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்த முற்றுகையால் மட்டுமல்லாமல், இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கலான கடல்சார் சட்டங்களாலும் மாலுமிகள் உதவிக்காகக் கதறுகிறார்கள்

இந்தக் கப்பல்களில் பணியாற்றும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மாலுமிகள் தற்போது நடுக்கடலிலேயே சிக்கித் தவிக்கின்றனர். பல நாட்களாகக் கப்பல்கள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்பதால், மாலுமிகள் கடும் மன அழுத்தத்திற்கும் உடல் ரீதியான சோர்விற்கும் உள்ளாகியுள்ளனர். குடிநீர் மற்றும் உணவு இருப்பு குறைந்து வருவதும், மருத்துவ உதவி கிடைப்பதில் உள்ள சிக்கல்களும் அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன. நீண்ட கால கடல் பயணத்திற்குப் பிறகு கரை திரும்பக் காத்திருந்த மாலுமிகள், இந்த எதிர்பாராத முடக்கத்தால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சர்வதேச கடல்சார் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

hormuz

மோதல் தொடங்கிய பிறகு, ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பகுதியை ஒரு போர் மண்டலமாக சர்வதேச பேரம் பேசும் மன்றம் அறிவித்தது. அத்தகைய சூழ்நிலையில், மாலுமிகள் நிறுவனத்தின் செலவில் தாயகம் திரும்புவதற்கும், பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் பெறுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் பல மாலுமிகள் இந்த ஒப்பந்தங்கள் இல்லாத கப்பல்களில் உள்ளனர்,

ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் , வளைகுடாவில் சிக்கியுள்ள மாலுமிகளிடமிருந்து உதவி எண்கள் சேவை முடங்குமளவுக்கு அழைப்புகள் வந்தவாறு இருக்கிறது . நள்ளிரவு மாலுமிகளிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஒரு மாலுமி பயத்துடன் அழைத்து, 'நாங்கள் இங்கே குண்டுவீச்சில் சிக்கியுள்ளோம். நாங்கள் இறக்க விரும்பவில்லை. தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா. தயவுசெய்து எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள்' என்று உதவி கேட்டதாக ஈரானுக்கான ITF-இன் ஒருங்கிணைப்பாளர் முகமது அராச்செடி கூறியுள்ளார். மேலும் இது ஒரு அசாதாரணமான சூழ்நிலை, மிகுந்த அச்சம் நிலவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, மோதல் தொடங்கியதிலிருந்து 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.