ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1411 ஆக உயர்ந்திருக்கிறது. 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சாலைகள் மற்றும் தொலைதொடர்புக்கான சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தானில், மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜலாலாபாத் அருகே 6 ரிக்டர் அளவில், 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்திருக்கிறது. இதை தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதி செய்திருக்கிறார். மேலும், 3124 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது. குறிப்பாக 5400க்கும் அதிகமான வீடுகள் முற்றிலுமாக உருக்குலைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தலிபான் அதிகாரி ஹா மஹ்மூத் சுமார் 8000 வீடுகள் இடிந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலநடுக்கத்தால் 12,000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும் சேதத்தை சந்தித்துள்ள குணார் பகுதியை அடைவதே மீட்புக் குழுவினருக்கு பெரும்சவாலாக இருப்பதாக சுகாதாரத் துறைசெய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கரடுமுரடான மற்றும் செங்குத்தான நிலப்பரப்பில் நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதென்றும், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புக் குழுவினர் செல்ல கடினமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குணார் பகுதிகளில் செல்போன் சேவையும் சரிவர இயங்காததால், பாதிப்பு குறித்து முழுவிவரங்களை பெற முடியாத சூழல் உள்ளது என்றும் ஆப்கன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணத்தில் உள்ள காஜியாபாத் கிராமம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. கிராமத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் எனும் 50 வயது மனிதர், “இடிபாடுகளின் கீழ் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க ஏதேனும் உதவி கிடைக்குமா என எதிர்பார்க்கிறோம். கடும் குளிர் நிலவுகிறது; சாப்பிட எதுவும் இல்லை, தங்குவதற்கு இடமுமில்லை. இது மிகுந்த அவலமான சூழ்நிலை” என அல் ஜசீராவிடம் தெரிவித்திருக்கிறார். மற்றொருவரோ, “24 மணி நேரம் ஆகிவிட்டது.. உயிரிழந்தவர்களை மீட்கவோ அல்லது இடிபாடுகளை அகற்றவோ எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என தெரிவித்ததாக அல்ஜசீரா தெரிவித்திருக்கிறது.
நிலநடுக்கத்தால் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், சாலைகள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. இதனால் அவசரகால மீட்புப் படையினர் இன்னும் சில கிராமங்களுக்குச் சென்றடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க பலநூறு கமேண்டோக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் பல முறை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 2022 ஜூன் மாதத்தில் 5.9 ரிக்டர் அளவிலும், 2023 அக்டோபரில் 6.3 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் ஒவ்வொன்றிலும் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவது ஏன் என்பது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மிக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறது. அதாவது, “கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நிலநடுக்கம் சாதாரணமாக ஏற்படுகிறது. காரணம், இந்தியா பிளேட் மற்றும் யூரேஷியா பிளேட் எனப்படும் நிலத்தட்டுகள் ஹிந்து குஷ் மலைத்தொடரின் கீழ் சந்திக்கும் இடம் அங்கு அமைந்துள்ளது” எனத் தெரிவிக்கிறது.
1950 முதல், 250 கிலோமீட்டர் சுற்றளவில் 71 நிலநடுக்கங்கள் (6 ரிக்டர் அளவுக்கும் மேற்பட்டவை) பதிவாகியுள்ளன. அதில், 6 முறை 7 ரிக்டர் அளவைத் தாண்டியவை என்றும் USGS தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபைக்கும் Red Cross சங்கத்திற்கும் 1 மில்லியன் பவுண்டு (சுமார் $1.35 மில்லியன்) நிதி ஒதுக்குவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்தியாவும் ஆஃகானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. காபுலுக்கு 1,000 கூடாரங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன என்றும் குனாருக்கு 15 டன் உணவுப் பொருட்கள் தற்போது கொண்டு செல்லப்பட்டு வருகின்றன இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், கூடுதலான நிவாரணப் பொருட்களும் இன்று மாலைக்குள் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.