அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறால் 11,000 விமானங்கள் பாதிக்கப்பட்டு, 15 லட்சம் பயணிகள் தவித்தனர். சைபர் தாக்குதல் காரணமா என்ற சந்தேகம் எழுந்தாலும், இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய காப்பர் கேபிள்கள் மற்றும் ரவுட்டர்களில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவில் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 11,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 15 லட்சம் பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டதுடன், பல விமானங்கள் தாமதமாகின.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.36 மணியளவில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது வானில் 3,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அவசரகால நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு விமானப் போக்குவரத்து முடங்கியதற்குப் பின்னால் சைபர் தாக்குதல் அல்லது ஈரானின் சதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுவரை அத்தகைய தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரி மார்க் வேய்ன், சைபர் தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றார். மேலும், இதுவரை எந்தவொரு ஹேக்கர் குழுவும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், 1980-களில் பயன்படுத்தப்பட்ட பழைய காப்பர் கேபிள்கள், சுவிட்ச்கள் மற்றும் ரவுட்டர்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விமானப் போக்குவரத்து முடங்கக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. புதிய தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சைபர் தாக்குதல் அல்லது வேறு தீய செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று முழுமையாக மறுக்க முடியாது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க விமானப் போக்குவரத்து முடக்கத்தில் ஈரானுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.