2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய 10 தீவிர வானிலை நிகழ்வுகளால் உலகிற்கு 122 பில்லியன் டாலர்களுக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் எய்ட் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில் இது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஆகும். இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெய்த கடும் பருவமழை மிக முக்கியமான பாதிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடித்த இந்த மழையினால் இரு நாடுகளிலும் சேர்ந்து சுமார் 1,860 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5.6 பில்லியன் டாலர் அதாவது சுமார் 41,500 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயால் 60 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. இழப்பின் அளவில் இதுவே முதலிடத்தில் உள்ளது. இதில் 400 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. புவி வெப்பமடைதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடே இத்தகைய பேரிடர்களுக்குக் காரணம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பணக்கார நாடுகளை விட வளரும் நாடுகளே உயிரிழப்பு ரீதியாக அதிக பாதிப்புகளைச் சந்திப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.