கர்ப்பிணி அமர்ந்திருக்கிறார் Reuters
பெண்கள்

உலகளவில் அதிகரிக்கும் வெப்பம்.. கர்ப்பிணிகள், சிசுவுக்கு ஆபத்து.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிகரிக்கும் வெப்பம் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

PT WEB

வெப்ப அலை எப்படி உலகம் முழுவதிலும் இருக்க கூடிய கர்ப்பிணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது என்ற தலைப்பில் அண்மையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்திருந்தது. வெப்ப அலைக்கான வரையறை ஏதும் தனியாக இல்லாத சூழலில், அதுகுறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து தாங்களாகவே சொந்த வரையறையை உருவாக்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. அதன்படி, 1960 ஆம் ஆண்டு தொடங்கி செய்யப்பட்ட ஆய்வில், வெப்பப் புயல்களின் அளவு காளான் போல நாளுக்கு நாள் பெருகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 1960-ல் வெறும் 50 ஆக இருந்த வெப்பப் புயல்களின் எண்ணிக்கை, இந்த தசாப்தத்தில் 665-ஐ கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கிட்டத்தட்ட 85% புவிப்பரப்பைக் கடந்து, உலகில் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதித்ததாக அந்த புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் நிலவும் வெப்பம்

அதன்படி, சமீபத்திய ஆய்வுகள் மூலம் வெப்ப அலைகளுக்கும், கடுமையான கர்ப்ப கால சிக்கல்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஒரு பெண் பழக்கப்பட்டு வளர்ந்த வெப்பநிலையைக் காட்டிலும், கூடுதலாக ஏற்படக் கூடிய ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கூட அவர்களுக்கு கர்ப்பகால தீங்குகளை விளைவிக்கும் என தெரிகிறது. இதற்காக மெக்சிகோ நகரின் மில்லியன் கணக்கான பிறப்பு பதிவுகளை ஆய்வு செய்த ராய்ட்டர்ஸ் குழு, கர்ப்பத்தின் கடைசி மாதத்தில் வெப்பப் புயல் அல்லது வெப்ப அலை தாக்கம் அதிகரித்ததால், குறைப்பிரசவ சதவீதமும் அதிகரித்ததை கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

குறைப்பிரசவம் மட்டுமே கர்ப்பிணிகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து இல்லை. வெப்பம் திடீரென உயருவதால், ரத்த அழுத்தம் அபாயகரமான அளவு உயரக்கூடும் எனவும், நோய்த்தொற்று, சிசுவிற்கு பிறவிக்குறைபாடு ஏற்படக் கூடும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. சில பெண்களுக்கு இதனால் கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பது போன்ற துயரும் நடக்க நேரிடும் என்றும் அந்த புலனாய்வு செய்தி அறிக்கை எச்சரித்துள்ளது. வெப்பத்தால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்றாலும் கூட, கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற செய்தி தற்போது மருத்துவர்களை அதிர வைத்துள்ளது.