ramayana ANI
டிரெண்டிங்

திரையை மிரட்டிய ராவணன்.. தமிழனை கொண்டாடும் ரசிகர்கள்! இறுதியில் வென்ற ராமாயணம்?

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ள ராமாயணா திரைப்படத்தில் யஷ் நடித்துள்ள ராவணன கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

PT WEB

ராவணனின் கம்பீரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ராமாயணா திரைப்படம், யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, பார்வையாளர்களை மிரட்டுகிறது. 4 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில், ராவணனின் கதாபாத்திரம் தனித்துவமாக காட்சியளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், ராவணனின் கம்பீரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா. ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்-ம் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், 4 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசைமைத்துள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் என்பவர், ஹாலிவுட் இன்டர்ஸ்டெல்லார், இன்செப்ஷன் போன்ற பிரபலமான படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார். அவதார் படத்திற்கு வி.எப்.எக்ஸ் செய்த DNEG நிறுவனம் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. கிட்டதட்ட 600 நாட்கள் என்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடத்தப்பட்டுள்ளது.

300-க்கும் மேற்பட்ட பல்வேறு ராமாயண பதிப்புகளை ஆராய்ச்சி செய்து, இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டங்களை செய்துள்ள இந்த படக்குழு, பார்வையாளர்களை மிரட்டியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு, ராவணனுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதான், இந்த திரைப்படத்தை மற்ற ராமாயணம் சார்ந்த படைப்புகளில் இருந்து தனித்துக் காட்டுகிறது. அதாவது, ராவணனாக வந்து நிற்கும்போதெல்லாம் ஒட்டுமொத்த திரையையும் தன் வசமாக்கிக் கொள்ளும் யஷ், நடிப்பில் ரன்பூர் கபூரையே ஓரம் கட்டுகிறார். இந்த கதாபத்திரத்தை யஷ் தழுவியுள்ள விதம், நின்று நிதானமாக அவர் பேசும் வசனங்கள், நடக்கும் விதம் என்று, உண்மையான கம்பீரமான ராவணனையே கண்முன் நிறுத்துகிறார்.

ramayana

ஆக்ரேஷமாக நடிக்கிறேன் என்று கூறிக் கொண்டு, வெறுமனே கத்திக் கொண்டு வில்லனாக நடிக்காமல், நடிப்பில் புது வித்தியாசத்தை அவர் காட்டியிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, ராணவன் ஏன் தவம் செய்து, தனக்கான பிரத்யேக வரத்தை பெற்றான், ராவணன் தனது 10 தலைகளுக்குள் சிந்திக்கும் விதங்கள் என்று, ஒரு புது கோணத்தை உருவாக்கி, எழுத்தாளர்களும் ராவணனை கம்பீரமாக உருவாக்கி உள்ளனர்.

ஒரு காலத்தில் தமிழர்களை கட்டி ஆண்ட ஒரு அரசனாகிய ராவணனையும், அவனது கம்பீரத்தையும், பல ஆண்டுகள் கழித்து, இன்றை ரசிகர்கள் சிலாகிக்கும் படி படக்குழு உருவாக்கியுள்ளனர். முதல் பாகத்தில் ராவணனின் ராஜ்ஜியம் இருக்கும்படி தான் கதை நகர்வதாகவும், பல்வேறு விமர்சகர்கள் தங்களது கருத்தை கூறி வருகின்றனர். எனவே, தமிழன் ராவணனின் கம்பீரத்திற்கு சான்றாக விளங்கியுள்ள இந்த ராமாயணா திரைப்படம், தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.