சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில், தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, நேற்று இரவு 10 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சி பிளாக் பகுதியில் பத்தாவது தளத்தில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறை உள்ளிட்ட 3 அறைகளில் இந்த சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், ஊடகங்களில் எவ்வித தகவலும் தெரிவிக்காமல், வேறு வழியாக சென்றுவிட்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதும், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.