டிரெண்டிங்

“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை காப்பாற்றலாம்” - சூலூர் எம்எல்ஏ

rajakannan

அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக சேர்ந்தால்தான் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும் என சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. தினகரனின் கருத்தினை அமைச்சர்கள் பலரும் மறுத்துள்ளனர். அமமுகவை அதிமுகவில் இணைக்கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் தூதுவிட்டார் என அமைச்சர் தங்கமணி கூறினார். 

இந்நிலையில், தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கோவையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் புதிய தலைமுறைக்கு பேட்டியில், “ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்தது தொண்டர்களாகிய எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய உற்சாகமாக இருக்கிறது. அவர்கள் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும். திமுகவை வேரோடு அறுக்க வேண்டும் என்றால் ஒன்றாக சேர வேண்டும். பேசி ஒன்று சேர்வதற்கான ஏற்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் செய்து கொண்டிருக்கிறார்.

தலைமை ஒரு நல்ல முடிவை எடுத்து தொண்டர்களிடையே அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 2 வாரத்திற்கு முன்பாக ஓ.பி.எஸ், டிடிவி தினகரனை சந்திக்க நேரம் கேட்டார் என்பது நடந்திருக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.