கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், அஸ்லான் என்ற பூனைக்குட்டியை தத்தெடுத்த மூன்று மாதங்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அஸ்லானின் உரோமம், உமிழ்நீரால் முகத்தில் கடுமையான ஒவ்வாமை, கொப்புளம், தடிப்பு ஏற்பட்டதால் வேலை, மனநிலை பாதிக்கப்பட்டது. பல சிகிச்சைகள் பலனளிக்காததால், மனம் நொந்தபடி அஸ்லானை முந்தைய உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளான இவர், 3, புலி, வேதாளம் என்று பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது, மிஷ்கின் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிரெயின் படத்திலும், முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கம் ஒன்றில், சோகமான நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 3 மாதங்களுக்கு முன்பு அஸ்லான் என்ற அழகான பூனைக்குட்டி ஒன்றை தத்தெடுத்தேன். அஸ்லான் வீட்டிற்கு வந்த பிறகு, வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக மாறியது.
நான் இதுவரை சந்தித்த பூனைக்குட்டிகளிலேயே அஸ்லான் மிகவும் இனிமையான ஒன்றாகவும் இருந்தது என்று குறிப்பிட்டார்.
ஆனால், அஸ்லான் வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, எனது முகம் முழுவதும் கொப்புளங்கள் வந்துவிட்டன. மாம்பழங்களை சாப்பிட்டதால் இப்படி ஆகிவிட்டது என்று முதலில் நினைத்தேன். ஆனால், தோல் மருத்துவரை சந்தித்தபோது தான், அஸ்லானின் உமிழ்நீர் மற்றும் உரோமத்தால், தோல் பிரச்சனை வந்தது தெரியவந்தது.
இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது என்று பதிவில் கூறிய ஸ்ருதி ஹாசன், அஸ்லானை பலமுறை சுத்தப்படுத்திய பிறகும், பல மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகும், தனக்கான பிரச்சனை சரியாகவில்லை என்று சோகத்துடன் தெரிவித்தார்.
இதனால் என் வேலை, சருமம், மனநிலை என அனைத்தும் பாதிக்கத் தொடங்கியது. என் ஒவ்வாமையை சமாளித்துக்கொண்டே, அரவணைப்பு மற்றும் பாசத்துடன் அவனுக்குத் தகுதியான முறையில் அன்பு செலுத்த முயற்சித்தேன்.
ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தததால், அஸ்லானை அவரது முந்தைய உரிமையாளிடமே கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும், இது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. என்னையும் என் வீட்டையும் நேசிக்கும் ஒரு அப்பாவி ஆத்மாவிடம், அவன் ஏன் என்னை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறது என்பதை விளக்க முடியாமல் நான் உணரும் குற்றவுணர்வையும் வலியையும் விவரிக்கக்கூட என்னால் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு விலங்கிற்கு அடைக்கலம் தரமுடியாமல் போய்விட்டது என்ற தனது குற்றவுணர்வை, பதிவு ஒன்றின் மூலம் மிகவும் சோகத்துடன் ஸ்ருதி ஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார்.