mammoths reuters
டிரெண்டிங்

அழிந்துபோன ராட்சத உயிரினம்! AI உதவியுடன் மீட்டெடுக்கும் விஞ்ஞானிகள்? மீண்டும் கால் பதிக்குமா?

அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர முடியுமா என்ற விஞ்ஞானிகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாமூத்தையும் மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி கவனம் பெற்றுள்ளது.

PT WEB

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன மாமூத்தை, AI மற்றும் CRISPR gene-editing உதவியுடன் மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். Colossal Biosciences நிறுவனம், மாமூத்தின் மரபணு தகவல்களை ஆசிய யானையின் DNA-வுடன் ஒப்பிட்டு, அடர்த்தியான ரோமங்கள், சிறிய காதுகள், குளிரைத் தாங்கும் உடல் அமைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட புதிய யானையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு காலத்தில் பூமியின் பனிப்பிரதேசங்களில் கம்பீரமாக சுற்றித்திரிந்த ராட்சத உயிரினம்... அடர்த்தியான ரோமங்கள், பெரிய உடலமைப்பு, நீண்டு வளர்ந்த தந்தம் என இன்றும் மனிதர்களின் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருப்பது மாமூத். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் இருந்து அழிந்துபோன இந்த உயிரினத்தின் எலும்புகள் மற்றும் உறைந்த உடல் பாகங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், மாமூத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு மனிதர்களுக்கு இனி கிடைக்காது என்பதே இதுவரை இருந்த நிலை.

ஆனால், அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் கொண்டுவர முடியுமா என்ற விஞ்ஞானிகளின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாமூத்தையும் மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி கவனம் பெற்றுள்ளது.

mammoths

அமெரிக்காவைச் சேர்ந்த Colossal Biosciences என்ற Biotechnology நிறுவனம், Woolly Mammoth-ன் முக்கிய பண்புகளைக் கொண்ட ஒரு யானையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமூத்தின் மரபணு தகவல்களையும், அதற்கு நெருங்கிய உயிருடன் இருக்கும் ஆசிய யானையின் மரபணுவையும் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மாமத்தைப் போல அடர்த்தியான ரோமங்கள்... சிறிய காதுகள்... குளிரைத் தாங்கக்கூடிய உடல் அமைப்பு... பனிப்பிரதேசத்தில் உயிர்வாழ உதவும் கொழுப்புச் சேமிப்பு என பல்வேறு பண்புகளை உருவாக்குவதுதான் இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.

ஆரம்பத்தில், இதற்காக சுமார் 60 மரபணுக்களில் மாற்றம் செய்தால் போதும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட genomic ஆய்வுகளில், மாமத்தின் பல்வேறு பண்புகளை உருவாக்க 150-க்கும் மேற்பட்ட மரபணுக்களில் மாற்றங்கள் தேவைப்படலாம் என தெரியவந்துள்ளது.இதனால், விஞ்ஞானிகளுக்கு முன்பிருந்ததைவிட மிகப்பெரிய மரபணு சவால் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல மரபணுக்களில் மாற்றம் செய்தால், அவை ஒன்றுக்கொன்று எப்படி செயல்படும்? எந்த மாற்றம் தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும்? எந்த மரபணு சேர்க்கை மூலம் மாமத்தின் பண்புகளை உருவாக்க முடியும்? என பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், இந்த சிக்கலான பணிக்கு Artificial Intelligence-ன் உதவியை விஞ்ஞானிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான genetic combinations-ஐ வேகமாக ஆய்வு செய்து, பல்வேறு மரபணு மாற்றங்கள் ஒன்றாகச் செயல்படும்போது ஏற்படக்கூடிய விளைவுகளை கணிக்க AI பயன்படுத்தப்படுகிறது.

mammoths

AI மட்டுமின்றி, உயிரினங்களின் DNA-வில் துல்லியமான மற்றும் எளிமையான மாற்றங்களைச் செய்யப் பயன்படும் நவீன மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பமான CRISPR gene-editing தொழில்நுட்பமும் இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே மாமத்தைப் போன்ற அடர்த்தியான ரோமங்கள் உள்ளிட்ட சில பண்புகளைக் கொண்ட “Woolly Mice” உருவாக்கப்பட்டு, மாமத் தொடர்பான மரபணு மாற்றங்களைச் சோதிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலில் 2028-ம் ஆண்டுக்குள் மாமூத்தைப் போன்ற யானைக் குட்டியை உருவாக்கலாம் என இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தேவைப்படும் மரபணு மாற்றங்களின் எண்ணிக்கையும் சிக்கலும் அதிகரித்துள்ளதால், இந்த முயற்சியின் காலக்கெடு 2030-களின் தொடக்கம் வரை தள்ளிப்போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழுந்துபோன உயிரினத்தை மீட்டெடுக்கும் முயற்சி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்