டிரெண்டிங்

லாலு பிரசாத் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

webteam

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தொகுதி பங்கீடுகள் முடிவாகி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுள்ளன. அத்துடன் வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரீய ஜனதா தளம் 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. அத்துடன் ராஷ்டிரீய லோக் சம்தா கட்சிக்கு 5 இடங்களும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்சா கட்சிக்கு 3 இடங்களும் மற்றும் வீகாஷில் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டணி ஒப்பந்ததை ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜா அறிவித்துள்ளார்.

முன்னதாக பீகாரில் காங்கிரஸ் கட்சி 14 இடங்கள் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் காங்கிரஸ் மற்றும் ராஸ்டிரீய ஜனதா தளம் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியதாக கூறப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அதை 11 இடங்களாக குறைத்து கொண்டது. அதன் பின்னரும் இரு கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தற்போது காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.