jailer 2 ANI
டிரெண்டிங்

மிரள விடும் ஜெயிலர் 2! இன்னும் ஒரு வாரம் தான்.. 1000 கோடி ஜெயிப்பாரா சூப்பர் ஸ்டார்?

ஜெயிலர் 2 திரைப்படத்தின் 21-வது நாள் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.

PT WEB

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் 21 நாட்களில் 821 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனைக்கு தீபாவளி வெளியீடுகள் மற்றும் ஓடிடி வெளியீடு சவாலாக உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப்,ஹிரித்திக் ரோஷன், விஜய்சேதுபதி ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். முந்தைய பாகம் ஹிட் ஆனால் 2-ஆம் பாகம் ஹிட் ஆகாது, படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தால் 2-ஆம் பாதி சொதப்பிவிடும் என்று இருந்த பல்வேறு தமிழ் சினிமாவின் சாபங்களை, இந்த ஜெயிலர் 2 திரைப்படம் உடைத்து, பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தது. இப்படியான சூழ்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, இந்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களில் மட்டும், சுமார் 821 கோடி ரூபாயை, உலக அளவில் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 545 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் என்ற இமாலய வசூலை குவிக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். ஆனால், அந்த வசூலை அடைவதற்கு ஒரு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த வாரத்தில் சூர்யா நடித்த சீன், ரன்பீர் கபூர், யாஷ் நடித்த ராமாயணா, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள், தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

jailer 2

இந்த திரைப்படங்களில், ஏற்கனவே ராமாயணாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. மற்ற படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தால், பொதுமக்கள் அந்த படங்களை நோக்கி தான், திரையரங்குகளுக்கு செல்ல முற்படுவார்கள். இதுமட்டுமின்றி, நவம்பர் 12-ஆம் தேதி அன்று, ஜெயிலர் 2 திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் வெளியாக இருப்பதால், ஓடிடியிலேயே பார்க்கலாம் என்று மக்கள் முடிவு செய்தால், தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி திரைப்படம் என்ற சாதனையை ஜெயிலர் 2-ஆல் சாதிக்க முடியாது. இவ்வாறு பல்வேறு சவால்களை மீறி, ரஜினி இந்த சாதனையை செய்துக் காட்டுவாரா என்று, அவரது ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.