TRAI Clarifies OTP Delay web
டெக்

இனி ’OTP’ பெறுவதில் தாமதம் ஆகுமா..? டெலிகாம் நிறுவனங்களுக்கான நிபந்தனை என்ன? TRAI விளக்கம்!

டிஜிட்டல் மயமாக்கலில் OTP-களை பயன்படுத்தி நடந்துவரும் பண மோசடிகளை தடுக்கும் விதமாக, ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மெசேஜ் டிரேசபிலிட்டி என்ற சிஸ்டத்தை TRAI கட்டாயப்படுத்தியது.

Rishan Vengai

எல்லாமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவரும் நிலையில், பெரும்பாலான பணபரிவர்த்தனையானது குறுஞ்செய்தியான OTP-களை பயன்படுத்துவதின் மூலம் நடைபெற்றுவருகிறது. இது இருந்த இடத்திலிருந்தே பணப்பரிவர்த்தனை செய்வதை சுலபமாக்கிவிட்ட நிலையில், மற்றொரு புறம் பொதுமக்களின் செல்போனுக்கு வரும் OTP-ஐ பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் டிஜிட்டல் பண மோசடிகளும் அரங்கேறிவருகின்றன.

இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பணமோசடி நடந்தால் உடனடியாக அணுக்கக்கூடிய புகார் எண்களையும் வழங்கி சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனாலும் இந்த வகையான பண மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது.

scam

இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, சமீபத்தில் டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், விஐ, ஜியோ, பிஎஸ்என்எல் அனைத்திற்கும் புதிய விதிமுறை மற்றும் நிபந்தனைகளை கட்டாயமாக்கியது.

TRAI கொண்டு வந்திருக்கும் இந்த புதிய விதிமுறையால் இனி மக்களுக்கான ஒவ்வொரு OTP பரிமாற்றமும் தாமதாக வரும் என பல்வேறு செய்திகள் வெளியாகின.

இத்தகைய சூழலில் மக்கள் OTP பெறுவதற்கு உண்மையில் தாமதமாகுமா? அல்லது ஆகாதா? என்பதுகுறித்து TRAI விளக்கமளித்துள்ளது.

TRAI கொண்டுவந்த புதிய விதிமுறை என்ன?

மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்களின் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை தெரிந்துகொள்ளவும், அதைவைத்து மோசடியில் ஈடுபடவும் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் போலி OTP-களையே பயன்படுத்துகின்றனர். அதாவது மக்களின் மொபைல் நம்பர்களுக்கு எதாவது போலி OTP தரவுகளையும் அல்லது போலி URL லிங்கையும் பயன்படுத்தி அதன்மூலம் ஏமாற்றுவதையே மோசடி செய்பவர்கள் பின்பற்றிவருகின்றனர்.

அதனை தடுக்கும் விதமாக மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையை TRAI அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மோசடி செய்பவர்கள் மெசேஜிங் சிஸ்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அவர்களின் எல்லா செய்திகளையும் டிரேஸ் செய்யுமாறு டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

TRAI

அதாவது நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் என எந்த நிறுவனமாக இருந்தாலும், எந்தவிதமான அமைப்பாக இருந்தாலும் ஓடிபி அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை மற்றவருக்கு அனுப்புவதற்கு முன்னர் அதன் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

இத்தகைய குறுஞ்செய்திகளை 'ஸ்கேன்' செய்யவும், அதனை அணுகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாமல் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தடை செய்யப்படும். வங்கிகள் அனுப்பும் ஓடிபி -ஆக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே ஆகவேண்டும். இந்த புதியவிதிமுறைக்கு இணங்காத நிறுவனங்களுக்கு டெலிகாம் ஆபரேட்டர்கள் தினசரி எச்சரிக்கைகளை அனுப்பி வருகின்றன.

TRAI

இந்த புதியவிதிமுறையை கடைபிடிக்க TRAI ஆரம்பத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்தது. ஆனால் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் போன்ற பெரிய நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து இது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

OTP பெறுவதில் தாமதம் ஏற்படுமா? TRAI விளக்கம்

மெசேஜ் ட்ரேசிபிலிட்டி என்ற புதிய விதிமுறையானது மோசடி நடவடிக்கைகளை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என TRAI நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை டிசம்பர்.1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெசேஜ் ட்ரெசிபிலிட்டி என்ற விதிமுறையை டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் பின்பற்றும்போது, சரியான நேரத்தில் OTP-க்களை பெருவதில் மக்கள் சிரமப்படுவார்கள் என்றும், OTP தாமதாகவே வரும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் TRAI ஆனது தற்போது ஒரு பதிவை பதிவிட்டு விளக்கமளித்துள்ளது. அதன்படி மக்களுக்கு வரும் மெசேஜ்களின் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ளவே இந்த விதிமுறை என்றும், இதனால் மக்களுக்கு OTP வருவதில் தாமதம் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.