விஞ்ஞானி வளர்மதி
விஞ்ஞானி வளர்மதி  Twitter
டெக்

சந்திரயான் 3-ன் கவுண்டவுன் குரலுக்கு சொந்தக்காரர்... ‘வர்ணனனையாளர்’ விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை அடைவதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பை தொட்டது. இதன் அடிப்படையில் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது.

சந்திரயான் 3

நிலவிலும் பல சாதனைகளை செய்துவருகிறது சந்திரயான் 3. இப்படியான சந்திரயான் 3, ஏவப்படும் முன் ஒரு கவுண்டவுன் ஒலித்ததே... அந்த குரல் நினைவிருக்கிறதா உங்களுக்கு? அந்த ஒரு ஏவுகணை மட்டுமல்ல... எந்தவொரு ஏவுகணையும் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னால் கொடுக்கப்படும் கவுண்டவுனை கேட்பதென்பது தனி ஆர்வம்தான்.

இப்படி ஏராளமானவர்களை ஆர்வத்தில் ஆழ்த்தும் கவுண்டவுன் குரலுக்கு சொந்தகாரர்தான் விஞ்ஞானி வளர்மதி. இவர் தான் சந்திரயான் 3 விண்கலத்திற்கும் கவுண்டவுன் குரல் கொடுத்தவர். இதுமட்டுமல்ல இஸ்ரோவின் பல்வேறு ஏவுகணைகளுக்கு கவுண்டவுன் குரல் கொடுத்தவரும் இவர்தான். இவர் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

கம்பீரமான குரல், தொழில்நுட்ப வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் என தனது தனித்துவமான குரலால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டப்பட்டவர் வளர்மதி. சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக வளர்மதி பணியாற்றியுள்ளார்.

50 வயதாகிய வளர்மதியின் குரலுக்கு பிரபல விஞ்ஞானிகளும் ரசிகர்களாக உள்ளனர். இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட அவர், உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இறந்தார்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி C56 ராக்கெட் நிகழ்வை கடைசியாக வளர்மதி வர்ணனை செய்தார். தனது குரலால் பலரையும் கவர்ந்த வளர்மதியின் மரணம் இஸ்ரோவில் பணியாற்றும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.