டெக்

சந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை !

சந்திராயன் 2 திட்டம்: 70 விஞ்ஞானிகள் ஆலோசனை !

சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்தச் சந்திராயன் 2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் சுமந்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008 அக்டோபர் 22 ஆம் தேதி சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் 3,400-க்கும் அதிகமான முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பல்வேறு கோணங்களில் நிலவை முப்பரிமாண படங்களாக எடுத்து அனுப்பியது.

நிலவில் தண்ணீர் திவலைகள் தோன்றி மறைகின்றன என்பதை கண்டு பிடித்தது. 2 ஆண்டுகள் வரை சந்திராயன்-1 செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 2009 ஆக. 29-ம் தேதி அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்து வருகிறது. இந்த விண்கலம் கடந்த ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்தத் திட்டம் அக்டோபர், நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளின் தொடர்பு இரண்டே நாட்களில் துண்டிக்கப்பட்டது. அதன்பின் கடந்த செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் செயற்கைக்கோளும் தோல்வியில் முடிந்தது. எனவே சந்திராயன்-2 விண்கலத்தை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி மாணவர்களும் "நிலவில் அறிவியல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதில் சுமார் 70 பேர் பங்கேற்றனர். மிக முக்கியமாக இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கிரண் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். இந்தக் சந்திப்பின்போது சந்திராயன் 2 திட்டத்தில் இருந்த சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், சந்திராயன் 2 தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் தீர்வு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.