டேட்டா தேவையில்லாத, குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காகக் குறுகிய கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
'தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிகள், 2026'-ன் கீழ் செப்டம்பர் 21, 2026 அன்று இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான கால வேலிடிட்டி கொண்ட சிறப்பு வவுச்சர்களை வாய்ஸ், SMS மற்றும் டேட்டா சேவைகளுக்காகக் கட்டாயம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது ஒரு மாதத்தில் அந்தத் தேதி இல்லை எனில், அம் மாதத்தின் இறுதி நாளில் புதுப்பிக்கப்படும்.
டேட்டா பேக்குகளுடன் சேர்த்து அதிக விலையுள்ள ரீசார்ஜ் திட்டங்களை வாங்க இயலாத குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும். நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டத்துடன், 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவு கொண்ட பிற STV திட்டங்களையும் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். ஏப்ரல் 7, 2026 அன்று வரைவு அறிக்கையை வெளியிட்டு, ஜூன் 15 அன்று பொதுமக்களுடனான கலந்தாய்வுக்குப் பிறகே டிராய் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளது.