ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் பணம் அனுப்பும் வங்கிகள், பயனாளி வங்கிகள் மற்றும் PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற கட்டண சேவை வழங்குநர்களுக்கு (PSPs) பயனளிக்கும் என்றும் இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு UPI அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தில் பணப்பயன்பாடு படிப்படியாக குறைய தொடங்கியது. ஒரு மாத்திற்கு 18 பில்லியனுக்கும் அதிமான பரிவர்த்தனைகள் UPI மூலம் செய்யப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட இந்தியாவைப் பாராட்டியுள்ளது. UPI இன் விரைவான வளர்ச்சியுடன்,மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா வேகமாக பண பரிவர்த்தனை செய்வதாகவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடுகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது .
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI அறிவித்துள்ளது.
பயனர்கள் ஒரு UPI செயலியில் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி கணக்கின் இருப்பைச் சரிபார்க்க முடியும். பல செயலிகளைப் பயன்படுத்தினால், இந்த வரம்பு ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாகப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கி இருப்பை சரிபார்க்க முடியும் என்று இருந்தநிலையில், தற்போது அதற்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் நிலையை ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு இடையில் குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளி இருக்கும்.
தானியங்கி பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும். காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகும் செயல்படுத்தப்படும் .
பயனர்கள் தங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணங்களை திருப்பி அனுப்ப கோரிக்கைகளை எழுப்பலாம். 5 பயனர்கள் என்ற இடைவெளியில் அனுப்பலாம்.
கட்டணத்தை உறுதி செய்வதற்கு முன் பெறுநரின் பதிவுசெய்யப்பட்ட வங்கிப் பெயர் மற்றும் விவரம் காண்பிக்கப்படும். இதனால் , பிழைகள் மற்றும் மோசடிகள் குறைக்கப்படும்.