matsya 6000
matsya 6000 pt bweb
டெக்

6,000 மீட்டர் ஆழத்தில் கடலுக்கடியில்... இந்தியாவின் அடுத்த டார்கெட் ‘மத்சியா 6000’!

Angeshwar G

கடலுக்கு அடியில் மனிதர்களுடன், 6000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய நீர் மூழ்கி கலன் ஒன்றை என்.ஐ.ஓ.டி., எனும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளது. அதற்கு, சமுத்ரயான் என பெயரிடப்பட்டுள்ளது.

நிலவின் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியது, ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என அடுத்தடுத்த வெற்றி திட்டங்களுக்கு பின் இத்திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேத்ர சிங், “இந்த ஆய்வுக்கலம் கடல் ஆராய்ச்சியின் ஒரு மைல்கல். இந்தக் கலன் ஆழ்கடலில் 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில் பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள், கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

ஆழ்கடல் நீர்மூழ்கி கலனான, ‘மத்சியா-6000’, 2024ம் ஆண்டு மத்தியில் ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும். கடலடியியல் உயர் பகுப்பாய்வு, உயிரி – பன்முக மதிப்பீடு, புவி-அறிவியல் கூர்நோக்கு, தேடுதல் பணிகள் மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு போன்ற கடலியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இதுபோன்று நீருக்கு அடியில் இயங்கக் கூடிய கலங்கள் மிக அவசியம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இத்திட்டம் குறித்து சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ 'மத்சியா 6000' நீர்மூழ்கிக் கப்பல், 3 மனிதர்களை 6 கிமீ கடல் ஆழத்தில் அனுப்பி ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ‘சமுத்ராயன்’ இந்தியாவின் முதல் ஆள்களைக் கொண்ட ஆழ்கடல் மிஷன்” என தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், நீர்மூழ்கிக் கப்பலின் முதற்கட்ட சோதனை அடுத்தாண்டு நடைபெறும் என்றும் வங்கக்கடலுக்குள் 500

மீட்டர் ஆழம் வரை இச்சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளே மனிதர்கள் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரித்துள்ள நிலையில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.