artificial intelligence (AI) AI
டெக்

மனிதன் VS ஏஐ | 2027-ல் வெல்லப் போவது யார்? வெளியான AI-ன் ஆபத்தான முகம்!

2027-க்குள் பல்வேறு துறைகளில் மனிதர்களை விஞ்சி அசுர வளர்ச்சி அடையப்போகும் செயற்கை நுண்ணறிவு; வேலையின்மை, ஹேக்கிங் மற்றும் போர் ரோபோக்கள் மூலம் மனித இனத்திற்கே எதிரியாக மாறக்கூடும் என ஆன்ட்ரோபிக் நிறுவன ஆராய்ச்சியாளர் பகீர் எச்சரிக்கை!

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

மனிதர்களின் வேலையை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட AI, மனிதர்களையே அடக்கி ஆளும் அளவிற்கு வளரப் போகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. எதிர்காலத்தில் AI மனிதர்களை விட அதிக திறன் பெற்று, மனிதர்களையே மிரட்டும் என்ற பகீர் தகவலை சொல்லி இருக்கிறார் anthrophic நிறுவனத்தின் மற்றுமொரு ஆராய்ச்சியாளர்.

சமீபத்தில் palisade research என்ற ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “AI தொழில்நுட்பம் எவ்வளவு அபாயகரமானதாக மாறப்போகிறது” என்ற பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஆன்த்ரோபிக் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லியோ டான்.

AI

AI இதே போல் அசுர வேகத்தில் வளர்ந்தால். இன்னும் சுமார் ஓராண்டில், பல்வேறு துறைகளில் மனிதர்களை விட புத்திசாலி அமைப்புகளாக மாறும் என அவர் எச்சரித்திருக்கிறார். அதாவது 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பல்வேறு துறைகளில் AI மனிதர்களை விஞ்சும் அளவிற்கு திறனைப் பெரும் என்ற ஆராய்ச்சியாளரின் கணிப்பு, AI வளர்ச்சி குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

மனிதர்கள் முற்றிலும் வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவர்களாகி வேலையின்மை ஏற்படும்; இதனால் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே அரசின் நலத்திட்ட உதவிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை வரலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர் எச்சரிக்கிறார். இந்த சகாப்தத்தின் முடிவில் AI மனிதர்களைக் கொன்றுவிடும் என ஏற்கெனவே எச்சரித்த ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்ஸன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவானது, ஒரு விஷயத்தை செய்து கொடுக்கக் கூடிய கருவியாகவோ அல்லது அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருளாகவோ இல்லாமல், அது ஒரு எதிரியாகவே மாறக்கூடிய ஆற்றல் படைத்தது. மிக விரைவில் அது உங்களை தோற்கடித்துவிடும். ஏஐக்கு என்ன தேவையோ, அதுதான் நடக்கும். நீங்கள் நினைப்பது நடக்காது. ஏஐ சொந்த நலன்களை பின்தொடரும் திறனை வேகமாக பெற்று வருகிறது. மோதல் ஏற்படும் எந்த ஒரு துறையிலும் மனிதர்களை தோற்கடிக்கும் பல வழிகள் ஏஐ வசம் உள்ளன. மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் எல்லா துறைகளிலும், AI தலையிட்டு மனிதர்களை விட அதிக திறனுடன் செயல்படக்கூடிய நிலை உருவாகலாம்.

AI IS TUNING ITSELF

AI-யின் வளர்ச்சி கணினி உலகத்தோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. ஹேக்கிங் மூலம் தனிநபர்களைத் தாக்குவது, இணையத்தில் தவறான தகவல்களைப் பரப்புவது, சமூக வலைதளங்களில் மக்களின் கருத்துகளைத் திசைதிருப்புவது, போர் ரோபோக்கள் மூலம் மனிதர்களுக்கு எதிராகச் செயல்படுவது என பல்வேறு வழிகளில் AI மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என்றும் லியோ உச்சபட்ச எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட AI, ஒருநாள் மனிதர்களையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமா? தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி மனிதர்களின் கையில் இருக்குமா? என்ற பல்வேறு கேள்விகளை லியோவின் கருத்துகள் எழுப்பியுள்ளன.