எமோஜிக்கள் pt web
டெக்

GEN Z தலைமுறையினரின் அடையாளம் எமோஜிக்கள்.. ஆய்வில் வெளிவந்த புதிய தரவுகள்!

GEN Z தலைமுறையினர் 88% பேர், எமோஜியை அதிகம் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

PT WEB

எமோஜிக்கள்... இளம் தலைமுறையினரின் அடையாளங்களில் ஒன்று. இவர்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் தொடர்பு கொள்ளும்போது எழுத்துகள், எண்கள் இருக்கிறதோ இல்லையோ எமோஜிக்கள் நிச்சயம் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த அட்லாசியான் (ATLASSIAN) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 13 முதல் 30 வயதாகும் GEN Z தலைமுறையினர் 88% பேர் தங்கள் தகவல் பரிமாற்றத்தில் எமோஜிக்களை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 10 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 88% பேர் ஒவ்வொரு தகவல் தொடர்பிலும் எமோஜி பயன்படுத்துவதாக கூறினர்.

விரைவான தகவல் தொடர்புக்கும் உணர்வுகளை துல்லியமாக கடத்தவும் உதவும் எமோஜிக்கள் முதன்முதலில் 1999இல் ஜப்பானின் NTT DOCOMO நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. எனினும் 2008இல் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் எமோஜியை சேர்த்தபின்பே அவை உலகளவில் பிரபலமாகின. தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதியை சர்வதேச எமோஜி தினமாக கொண்டாடும் அளவுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அவை மாறிவிட்டன. இன்று 3 ஆயிரத்து 500 எமோஜிக்கள் உலகெங்கும் புழக்கத்தில் இருந்தாலும் அதில் சுமார் 10 மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கட்டை விரலை உயர்த்துவது, இதயம், அழுகை முகம், தீ போன்ற குறியீடுகளே அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறது எமோஜிபீடியா என்ற தளம்.

கவிஞர் வெய்யில்

புதிய தலைமுறை இணையத்தில் காதலர் தின சிறப்பான ஊனே உயிரே எனும் தலைப்பில் சில பேட்டிகள் வெளியானது. அப்போது கவிஞர் வெய்யில் பேசிய கருத்துகள் ”இக்கால காதலும்.. மனித உணர்வுகளும்..” - கவிஞர் வெய்யில்! எமோஜிக்கள் தொடர்பாக கவிஞர் வெய்யில் பேசிய சில வார்த்தைகள் கீழே.. “இணைய உரையாடல்களை உணர்வுப்பூர்வமாக சரியாக புரிந்துகொள்ளும் வகையில் மேம்படுத்தியுள்ளது எமோஜிக்கள்தான். ‘நான் ஒன்னும் உன்ன தப்பா நினைக்கல’ இது ஒரு குறுஞ்செய்தி. இதை ஒரு கடிதத்திலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ, பேசியவர் சொன்ன அர்த்தத்திலேயே கேட்பவரும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும். ஆனால், 😍😄😉 இந்த மூன்று எமோஜிக்களை தனித்தனியாக வைத்து மேற்கண்ட குறுஞ்செய்தியைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் கொடுக்கும்.. முக்கியமாக, எந்தப் பொருளும் படிப்பவரை கஷ்டப்படுத்தாது. ஆக, சொல்லுக்குப் பக்கத்தில் வைக்கப்படும் குறியீடுகள் புதிய வகையான அர்த்தங்களை உற்பத்தி செய்து உரையாடலையும் உரையாடலில் நிகழும் புரிதலையும் எளிமைப்படுத்துகிறது”

ஆம். எமோஜிக்கள் இளை(ணை)ய தலைமுறையினரின் புதிய அடையாளங்கள்தான்!