Twitter
Twitter File Image
டெக்

நீலக்குருவிக்கு பதில் X: ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

Justindurai S

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் அதிரடியாக செய்து வருகிறார். குறிப்பாக ட்விட்டர் ப்ளூ டிக் பயனாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தினார். போலவே சமீபத்தில் ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

Elon Musk

அதோடு ட்விட்டரின் லோகோவாக நீல நிற குருவி இருந்துவந்த நிலையில் அதனை மாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார் எலான் மஸ்க். இதன் முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் புதிய லோகோவாக நாய் படத்தை வைத்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ட்விட்டர் லோகோ மீண்டும் பழசுக்கு (நீலக்குருவிக்கு) மாற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ட்விட்டரின் லோகோவை மாற்ற இருப்பதாக நேற்று அறிவித்திருந்தார் எலான் மஸ்க். ட்விட்டர் லோகோவான நீல பறவைக்கு பதிலாக X லோகோவை வைக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த ஜூலை 12ஆம் தேதி xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கிய நிலையில் அதை விளம்பரப்படுத்தும் வகையில் ட்விட்டர் லோகோவை அவர் மாற்ற திட்டமிட்டதாக கூறப்பட்டது.

எலான் மஸ்க் நேற்று காலை தன் அறிவிப்புக்குப்பின், ட்விட்டரின் புதிய லோகாவான 'எக்ஸ்' தொடர்பான சிறிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இவை அனைத்தையும் தொடர்ந்து, தற்போது ட்விட்டரின் லோகோ X என மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓ-வாக, லிண்டா யாக்காரினோவை நியமித்தார். அப்போது அவர் ட்விட்டரை ‘எக்ஸ்’ நிறுவனமாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரை, சோஷியல் மீடியா, மெசேஜிங், பணப் பரிவர்த்தனை என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையிலான செயலியாக மாற்ற அவர் திட்டமிட்டிருக்கிறார்.

Twitter

அடுத்தபடியாக ட்விட்டர் தளத்தின் நிறம் (தீம் கலர்) கருப்பாக மாற்றப்படலாமென சொல்லப்படுகிறது. இது எலான் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவின் அடிப்படையில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.