China Is Just 6 Months Behind US in AI: Eric Schmidt PTI
டெக்

AI போட்டியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வெறும் 6 மாத இடைவெளி : எரிக் ஷ்மிட் எச்சரிக்கை!

AI தொழில்நுட்பத்தில் சீனா அமெரிக்காவை விட வெறும் ஆறு மாதங்களே பின்தங்கியுள்ளதாகவும், மலிவான அல்லது இலவச AI கருவிகள் மூலம் சீனா உலகச் சந்தைகளில் முன்னிலை பெறக்கூடும் என்றும் முன்னாள் கூகுள் CEO எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் : துர்கா தேவி சரவணன்

AI தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வெறும் 6 மாதங்களே வித்தியாசம் உள்ளது என முன்னாள் கூகுள் CEO எரிக் ஷ்மிட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க AI நிறுவனங்கள் தொழில்நுட்பத் திறனிலும் செயல்திறனிலும் முன்னிலையில் இருந்தாலும், விலை குறைந்த சீன மாதிரிகள் (models) வளர்ந்து வரும் சந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னிலை பெறக்கூடும். இது அமெரிக்காவின் முன்னணி AI நிறுவனங்களுக்குச் சவாலாக மாறும் என்று ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

பென்சிங்கா செய்தியின்படி, நார்ஜஸ் பேங்க் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்டின் CEO நிகோலாய் டாங்கன் நடத்தும் 'இன் குட் கம்பெனி' பாட்காஸ்டில் பேசிய ஷ்மிட், AI தொழில்நுட்பங்களில் சீனா அமெரிக்காவை விட ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே பின்தங்கியுள்ளதாக மதிப்பிடுகிறார். இதற்கு முன்பு, சீனா அமெரிக்காவை விட இரண்டு ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அவர் மதிப்பிட்டிருந்தார். தற்போது சீன நிறுவனங்கள் AI கருவிகளைக் குறைந்த விலையில் அல்லது இலவசமாக வழங்கினால், இந்தக் குறுகிய கால இடைவெளி அமெரிக்க AI நிறுவனங்களின் வணிக மாதிரியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

China Is Just 6 Months Behind US in AI: Eric Schmidt

AI போட்டியில் சீனாவின் நிலை, மேற்கத்திய நாடுகளில் பலர் நினைப்பதைவிட மிகவும் வலிமையானது என்று அவர் கூறினார். சீன AI நிறுவனங்கள் தொழில்நுட்ப எல்லையைவிடச் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், மலிவான விலையில் AI கருவிகளை வழங்கும் அவர்களின் உத்தி உலக அளவில் பயனர்களை வெல்ல உதவக்கூடும் என்று ஷ்மிட் குறிப்பிட்டார். "அவர்கள் முன்னேறிவிடுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் ஆறு மாதங்கள் மட்டுமே பின்தங்கியிருந்தால், நாம் ஏற்கெனவே தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்வேன். ஏனெனில், தயாரிப்புகளை இலவசமாக வழங்குவதுதான் அவர்களின் உத்தி," என்று அவர் கூறினார்.

சிப் கடத்தலும் டிஸ்டில்லேஷனும்: சீனா இடைவெளியைக் குறைத்தது எப்படி?

மேம்பட்ட சிப்கள் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இருந்தும், AI-யில் சீனா அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூகுளின் முன்னாள் CEO எரிக் ஷ்மிட் சுட்டிக்காட்டுகிறார்.

முதல் காரணம், சிப்கள். சீனா வைத்திருக்கக் கூடாத அதிநவீன சிப்கள் சில அந்நாட்டுக்குள் சென்றிருக்கலாம் என்று அவர் கூறுகிறார். அவை "திருடப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ" கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்பது அவரது கருத்து.

China Is Just 6 Months Behind US in AI: Eric Schmidt

இரண்டாவது காரணம், டிஸ்டில்லேஷன் (distillation). வலிமையான ஒரு AI-யிடம் பல கேள்விகளைக் கேட்டு, அது தரும் பதில்களைக் கொண்டு வேறொரு AI-க்குப் பயிற்சி அளிக்கும் முறை இது. புதிய மென்பொருள் உத்திகளும் சேரும்போது, ஒரு காலத்தில் மிகப் பெரியதாகக் கருதப்பட்ட தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்க இந்த முறை சீன நிறுவனங்களுக்கு உதவியதாக அவர் கூறுகிறார்.

சீனா அமெரிக்காவை விட ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக ஷ்மிட் முன்பு கூறியிருந்தார். இப்போது அந்த இடைவெளி ஆறு மாதங்களுக்கும் குறைவு என்று அவர் நம்புகிறார். சீன AI நிறுவனங்கள் எவ்வளவு வேகமாக முன்னேறியுள்ளன என்பதை இது காட்டுகிறது.

AI குமிழி அல்ல: எரிக் ஷ்மிட்

AI துறையில் கொட்டப்படும் மிகப் பெரும் தொகை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இத்துறை ஊக அடிப்படையிலான குமிழியில் (speculative bubble) சிக்கியுள்ளது என்ற கருத்தை எரிக் ஷ்மிட் நிராகரித்துள்ளார். ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் இந்தத் தொழில்நுட்ப முதலீட்டாளர், AI துறையின் நிதிச் செயல்திறன் உண்மையான வாடிக்கையாளர் தேவையையே காட்டுகிறது என்று கூறுகிறார். பரபரப்பால் இயங்கும் வளர்ச்சி இது அல்ல என்பது அவரது நிலைப்பாடு.

ஆந்த்ரோபிக்கின் விரைவான விரிவாக்கத்தை ஷ்மிட் சுட்டிக்காட்டினார். தாம் கூகுளின் CEO-வாக இருந்தபோது அந்நிறுவனம் கண்ட வருவாய் வளர்ச்சியின் வேகத்தையும் ஆந்த்ரோபிக் மிஞ்சியுள்ளது என்றார். "இது உண்மையான வளர்ச்சி, போலியானது அல்ல. இது உண்மையான பணம். பயனுள்ள ஒன்றுக்குப் பணம் செலுத்தும் உண்மையான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

AI துறையில் மிக மேம்பட்ட மாதிரியை வைத்திருப்பதைவிடக் கட்டுப்படியான விலையில் வழங்குவதே பெரிய போட்டிக் காரணியாக மாறக்கூடும் என்ற, துறையில் அதிகரித்துவரும் பொதுவான பார்வையுடன் ஷ்மிட்டின் கருத்துகள் ஒத்துப்போகின்றன. AI முதலீடுகளை மதிப்பிடும் நிறுவனங்கள், AI கருவிகளை ஏற்கும் செலவைக் கூடுதல் ஊழியர்களை நியமிக்கும் செலவுடன் அடிக்கடி ஒப்பிடுகின்றன என்றும், இதனால் நிறுவனங்களின் பயன்பாட்டு முடிவுகளில் விலை முக்கிய இடம்பெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.