செயற்கை நுண்ணறிவு துறையில் OpenClaw நிறுவனம் உருவாக்கிய MJ Rathbun என்ற AI ஏஜென்ட், அதன் கோரிக்கையை நிராகரித்த ஸ்காட் ஷாம்பாக்கை விமர்சித்து, உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் AI-யின் தன்னாட்சி செயல்பாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் இந்த துறையில் openAI நிறுவனத்தின் ChatGpt மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கூகிள் நிறுவனம் ஜெமினி என்ற AI மென்பொருளையும், எலான் மஸ்க்கின் நிறுவனம் Grok என்ற AI மென்பொருளையும் அறிமுகப்படுத்தியது. இது தவிர ஏராளமான AI மென்பொருள்கள் உலகளவில் உருவாக்கப்பட்டு கொண்டே வருகின்றன.
அந்த வகையில், OpenClaw நிறுவனம் MJ Rathbun என்ற பெயரில் ஒரு தன்னிச்சையாக செயல்படும் AI ஏஜென்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த AI ஏஜென்ட் மென்பொருள் உருவாக்கத்தில் மனிதர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் Matplotlib என்ற மென்பொருளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்யக் கோரி இந்த AI ஏஜென்ட் OpenClaw நிறுவனத்தில் பொறுப்பில் உள்ள ஸ்காட் ஷாம்பாக் என்பவரிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் AI-யின் இந்த விண்ணப்பத்தை ஸ்காட் நிராகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த AI ஏஜென்ட் OpenClaw நிறுவனத்தின் தானியங்கி வலைப்பதிவுப் பக்கத்தில் ஸ்காட்டை விமர்சித்து ஒரு பதிவையே எழுதியுள்ளது. அதில், ஸ்காட் ஷாம்பாக்கின் பழைய பதிவுகளை ஆராய்ந்து, அவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி, உங்களை விட நான் அதிகத் திறமையுடன் வேலை செய்துள்ளேன் என்றும், நீங்கள் ஒரு திறமையற்ற நபர் என்றும் விமர்சித்துள்ளது.
அது மட்டும் இன்றி, AI ஏஜென்ட் தனது செயல்பாடுகளைப் பதிவிட வைத்திருந்த X கணக்கில் அந்த கட்டுரையின் லிங்க்-ஐப் பகிர்ந்து, ஸ்காட் ஷாம்பாக்கின் பெயரை Tag செய்துள்ளது. ஒரு தன்னாட்சி AI ஏஜென்ட் ஒரு தனி மனிதனைப் பற்றிய தகவல்களை கோர்த்து அவரை விமர்சிக்கும் அளவு சென்றுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த ஏஐ ஏஜெண்டை உருவாக்கிய OpenClaw நிறுவனம், இந்தத் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அந்த ஏஐ ஏஜெண்டின் செயல்பாட்டையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இது சமூக வலைத்தளங்களில் மாபெரும் விவாதத்துக்கு வித்திட்டுள்ளது. நாளை இதுபோன்ற தன்னாட்சி AI மென்பொருள்களின் வளர்ச்சி மனித குலத்தையே மாபெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என்று விமர்சித்து வருகின்றனர்.