செய்தியாளர்: பால வெற்றிவேல்
முழுக்க முழுக்க இந்தியாவினால் உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ரோபோ, சிறப்புற செயல்பட்டுள்ள காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட PSLV C60 ராக்கெட்டில் டாக்கிங் செயற்கை கோள்களுக்கு அடுத்தபடியாக அனுப்பப்பட்ட 24 உப செயற்கை கோள்களும் 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் RRM-TD எனப்படும் ரோபோட்டிக் கரங்கள். இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமாக இது அனுப்பப்பட்டது.
ஒரு ரோபோவானது பூமியில் செயல்படுவது என்பது வேறு; ஈர்ப்பு விசை, இயக்க விசை இல்லாத விண்வெளியில் செயல்படுவது என்பது வேறு. அப்படியிருக்கையில் இஸ்ரோ அனுப்பியுள்ள இந்த ரோபோ முதல் கட்டமாக கரங்களைக் கொண்டு பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில் ரோபோட்டிக் கரங்கள் தனது செயல்பாட்டை சிறப்புற தொடங்கியுள்ள நிகழ்வை காணொளியாக இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
பூமியிலிருந்து ரோபோவை செயல்படுத்துகின்றனர். விண்வெளி பொருட்களை ஆய்வு செய்ய இந்த ரோபோ முன்னோடியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்திலும் இந்திய தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ கரங்கள், திட்டமிட்டபடி செயலாற்றி இருப்பதால், வருங்காலத்தில் பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கு இது தொடக்கமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 350 கிலோமீட்டர் உயரத்தில் இந்த ரோபோ கரங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொழில்நுட்பம் 2035ம் ஆண்டு நிறுவ திட்டமிடப்பட்டுள்ள Bharatiya Antariksh Station (BAS) போன்ற எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு ஆதாரமாக திகழும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.