ATM pt
டெக்

ATMல் 100, 200 ரூபாய் நோட்டுகள் வருவதில்லையா?.... ரிசர்வ் பேங்க் போட்ட புதிய உத்தரவு!

செப்டம்பர் 30 க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஏடிஎம்களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம் வைக்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பொதுவாக, 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள்தான் ஏடிஎம்களில் கிடைக்கும். ஆனால், அனைத்து ஏடிஎம்களிலும் இந்த ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. பல ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் வருகின்றன. இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஏனெனில், வங்கிக் கணக்கில் 500 ரூபாய்க்கு குறைவாகவோ அல்லது 1000 ரூபாய்க்கு குறைவாகவோ பேலன்ஸ் இருந்தால் அவர்களால் எடுக்க முடியாமல் போகிறது.

இப்படி, அவசரத் தேவைக்காக குறைந்தத் தொகை எடுக்க விரும்புபவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கியான உத்தரவை வழங்கியுள்ளது. மக்களுடைய பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், பணம் எடுப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கவும் அனைத்து வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கேசட்டில் இருந்து 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கமாக ஒரு ஏடிஎம்மில் நான்கு கேசட்டுகள் இருக்கும். இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், ஏடிஎம்களில் ஏதேனும் ஒரு அடுக்கிலாவது குறைந்தது 75% 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இதை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.