தட்கல் டிக்கெட் பிரச்சினை: சுமார் இரண்டரை கோடி போலி கணக்குகள்!
அவசர நேரத்தில் ரயில் பயணத்திற்காக கொண்டுவரப்பட்ட தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை தற்போது பலருக்கும் எட்டாக்கனியாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சாத்தியமற்ற முயற்சி என அறிந்தும் கூட தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். தட்கலுக்கு முயற்சிக்கும் 90 விழுக்காடு பேர் பல முறை இணையதள முடக்கம்,
சர்வர் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. வெறும் இரண்டு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்துவிடுவதால், வருங்காலங்களில் அவசர கால ரயில் பயணம் என்பதே சாத்தியமற்றதாக மாறிவிடுமோ என சாமானிய மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
இது எல்லாம் ஒருபுறம் இருக்க சாமானியர்கள் முயற்சிக்கும் போது கிடைக்காத தட்கல் டிக்கெட், ஏஜெண்டுகளுக்கும், பயண முகவர்களுக்கும் மட்டும் எப்படி கிட்டுகிறது என்ற கேள்வி நீண்ட காலமாகவே உலாவிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால் கிடைப்பதற்கான வாய்ப்பு 85 முதல் 90 விழுக்காடு இருந்த நிலையில், நடப்பாண்டில் அது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இருந்து பல தரப்பில் இருந்து எழுந்த புகார்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம், ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து பல்வேறு கட்ட ஆய்வு, விசாரணைகளை முன்னெடுத்தன.
ஐ. ஆர்.சி.டி.சி. நடத்திய ஆய்வில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தட்கல் முன்பதிவு தொடங்கிய வெறும் 5 நிமிடங்களில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த 2.9 கோடி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. அதன் விளைவாக நாடு முழுவதும் சுமார் இரண்டரை கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளன. மேலும் மோசடியாக செயல்பட்டு வந்த 70 லட்சம் கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் பணியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. போலி கணக்குகள் முடக்கப்பட்டதன் மூலம் தட்கல் நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையத்தளத்தை அணுகுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று கூறப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளை எப்போது சரிசெய்யப்படும், இணையதளத்தில் இருக்கும் குறைகள் எப்போது நிவர்த்தி செய்யப்படுமென்ற கேள்விகளும் எழுந்துள்ளன.