நடிகர் சூரி pt desk
தமிழ்நாடு

விஜய், உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள் தான் - காதணி விழாவில் நடிகர் சூரி

டிவி நிகழ்ச்சியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நடன கலைஞர் மகன்கள் காதணி விழாவில் மாமானாக இருந்து நடிகர் சூரி சீர் வரிசை செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: கோகுல்

தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சிறப்பாக நடனமாடிய பஞ்சமி நாயகி என்பவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு காதணி விழா செய்து விட்டீர்களா என்று சூரி கேட்டுள்ளார். அதற்கு இல்லை என பஞ்சமி கூறவே, உங்கள் பிள்ளைகளுக்கு நான் தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என நிகழ்ச்சி மேடையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சமி நாயகி - மணிகண்டன் தம்பதியருக்கு தர்ஷித், அசோக மித்ரன், ஆதித்யா வர்மா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று காதணி விழா நடைபெற்றது. இதில், நடிகர் சூரி கலந்து கொண்டு குழந்தைகளின் தாய்மாமன் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் வரையில் உடனிருந்தார். பிறகு குழந்தைகளுக்கு புது துணிகள் மற்றும் சீர்வரிசைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாமன் திரைப்பட இயக்குனர் பிரசாந்த், நடிகர் சூரி, குழந்தையின் தாய்மாமன் கலைத்தென்றல் ஆகிய மூவர் மடியிலும் வைத்து பஞ்சமியின் குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, லோகேஷ் கனகராஜ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. நடிக்க வேண்டும் என்பது ஆசை. விஜய், உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள் தான் என்று தெரிவித்தார்.