கஞ்சா வழக்கில் ஆஜராகாமால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியுர் சவுக்குசங்கர் கஞ்சா வைத்திருந்தாக தேனி மாவட்ட PC பட்டி காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 17ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் சவுக்கு சங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டு 18ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் 20-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், சவுக்கு சங்கர் ஜாமின் வழங்கும் மனு மீது டிசம்பர் 24ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் இன்றைய விசாரணையில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 15 நாட்கள் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
நிர்வாக காரணங்களுக்காக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு 2ஆவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக சவுக்கு சங்கர் வழக்கு விசாரணைக்கு மாற்றப்படுவதாக நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.