கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி தினேஷ். இவர் 10 ஆண்டுகளாக கையில் வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கை செயலிழந்த நிலையில், அரசு மருத்துவர் நோபில் தலைமையிலான குழு, இரத்த நாள அறுவை சிகிச்சை மூலம் அவரது கையை மீண்டும் செயல்பட வைத்துள்ளனர்.
செய்தியாளர் - கோகுல்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் 38 வயதாகும் தினேஷ். இவர், அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் இடது கையில் சுமார் 10 ஆண்டுகளாக வலி இருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் அலட்சியமும், போதிய மருத்துவமும் இல்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கை உணர்ச்சி இல்லாமல் செயல் இழந்துள்ளது. தொடர்ந்து, அவதிப்பட்டு வந்த தினேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு, இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நோபில் அவரை சோதித்தபோது, தினேஷிற்கு கையின் ரத்தநாளத்தில் கட்டி வளர்ந்திருந்ததும், அது கை விரல்களுக்கு செல்ல வேண்டிய ரத்தத்தை நிறுத்தியதால் கை செயல் இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர் நோபில் மற்றும் அவரது தலைமையிலான மருத்துவர்கள் குழு, பல மணி நேரம் போராடி தினேஷின் தொடை பகுதியில் இருந்த கட்டியை அகற்றி தினேஷின் கையை காப்பாற்றி இருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவர் நோபல் கூறும் போது, நோயாளி சரியான நேரத்தில் வந்ததால் தான் காப்பாற்ற முடிந்தது. ஆறு மணி நேரம் கழிந்து வந்திருந்தால் கையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். மேலும், இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனை என்பதால் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
செயலிழந்த வாலிபர் ஒருவரின் கையை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திய கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.