சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்றவற்றில் நேற்று மற்றும் நேற்றைய முன்தினம் முதல் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் தான், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இன்று மகளிர் தின வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், ”வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் தின வாழ்த்துடன், 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்காக கொண்டுவரப்பட்ட புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, பிங்க் ஆட்டோ உள்ளிட்ட திட்டங்கள் அடங்கிய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.