அண்ணாமலை
அண்ணாமலை ட்விட்டர்
தமிழ்நாடு

”ஆரத்தி எடுத்தால் வெகுமதி கொடுப்பது நமது கலாசாரம் தான்; ஆனால் அந்த வீடியோ பழையது”- அண்ணாமலை விளக்கம்

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் சூடுபிடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுவதுடன், தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், வீடியோவின் உண்மை நிலை குறித்தான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - வாட்ஸ் அப் எண்ணுடன் பரப்புரையை ஆரம்பித்தார் சுனிதா! அடுத்த ராப்ரிதேவி?

இதுதொடர்பாக அண்ணாமலை இன்று (மார்ச் 29) தன்னுடைய எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, @CollectorCbe அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின்போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார். அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாசாரத்தில் உள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. பிறரைப்போல, பணத்தின்மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, @CollectorCbe அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உபியின் காட்ஃபாதர்: பிரபல கேங்ஸ்டர் முக்தர் அன்சாரி சிறையில் திடீர் மரணம்.. பதற்றத்தில் மாநிலம்!

மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரும் அந்த வீடியோ பழையது தான் தேர்தல் விதிமீறலில் வராது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

தேர்தல் காலம் என்பதால் இதுபோன்ற பல வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.