Relatives pt desk
தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் - ஓசூர் அருகே சோகம்

ஓசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையுடன் பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் முனிராஜ் - மீனா தம்பதியர். இவர்களுக்கு வைஷாலி என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது.

இந்நிலையில், வீட்டின் தண்ணீர் தொட்டியில் குழந்தை வைஷாலியுடன் மீனா சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 2 உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், மீனாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரே வீட்டில் தனித்தனியே சமைத்து வந்தது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே கொலையா? தற்கொலையா என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.