ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

ஸ்டாலினுக்கே தெரியும்... இருக்கமான முகத்தோடு சொன்ன ஜெயக்குமார்..!

திமுகவுக்கு செல்ல மாட்டேன்: ஜெயக்குமாரின் உறுதியான பதில்

Uvaram P

தன்னைச் சுற்றிச் சுழன்ற பரபரப்பு தகவல்களுக்கெல்லாம் தன்னுடைய பாணியில் ஒரு பதிலை கொடுத்து ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்தத்தைத் தொடர்ந்து, அதே பாணியில் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் திமுக பக்கம் செல்வார்கள் என்று பேசப்பட்ட நிலையில், ஸ்டாலினுக்கே தெரியும் நான் மானஸ்தன் என்று பதிலளித்து முடித்திருக்கிறார் ஜெயக்குமார்.. என்ன நடக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத கால அவகாசம் இருக்கிறது. எனினும், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சியில் துவங்கி, புதிய கட்சிகள் வரை தேர்தல் களத்திற்கு தயாராகத் தொடங்கிவிட்டன. இப்படியான சூழலில், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 2026 தேர்தலை சந்திக்க அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின்போது, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறினார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. எனினும், இருதரப்பும் கூடி பேசியதில், 2 மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. இந்த கூட்டணி தலைமை அளவில் ஸ்ட்ராங் ஆனாலும், தொண்டர் மத்தியில் ஜெல் ஆகவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. குறிப்பாக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததில், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்களுக்கு விருப்பமில்லை. 1991 மற்றும், 2001 முதல் 2021 வரை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை பெற்ற ஜெயக்குமார், 2021 தேர்தலில் தோல்வியுற்றார். அவர் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியும் ஒரு காரணமாக அமைந்தது. ஆம், பாஜகவுடனான கூட்டணி ராயபுரத்தில் பெரும்பகுதியாக இருக்கும் சிறுபான்மை மக்களிடம் எடுபடவில்லை. இப்படியாக, 2021 தோல்வி ஜெயக்குமாருக்கு பெரிய அளவில் மன வருத்தத்தை கொடுக்கவே செய்தது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இப்படியான சூழலில், அதிமுக - பாஜக மீண்டும் உறுதியான பிறகு, அதுகுறித்து எதுவும் பேசாமல் கடந்துசெல்கிறார் ஜெயக்குமார். முன்னதாக, அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜா, திமுகவில் இணைந்த நிலையில், அதே வரிசையில் சில அதிமுக சீனியர் தலைகள் திமுகவுக்கு செல்வார்கள் என்ற பேச்சு எழுந்தது. அதில் ஜெயக்குமாரின் பெயரும் அடிபட்டது. இந்த நிலையில்தான், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், தான் தொடர்பாக பரபரக்கும் தகவல்களுக்கு பதிலளித்துள்ளார்.

" ஆம், நான் மானஸ்தன் என்று ஸ்டாலினுக்கே தெரியும்.. பதவிக்காக யார் வீட்டு முன்னாலும் நின்ற ஆள் ஜெயக்குமார் இல்லை.. உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்தான்.. உடல் மண்ணுக்கு.. உயிர் அதிமுகவுக்கு. தன் மீது வதந்தி பரப்புவோர் ஏமாற்றத்தையே பெறுவார்கள். எழுதுவோர் எழுதிக்கொண்டே இருங்கள்.. i dont care." என்று கூறி நகர்ந்தார்.

மேலும், இதுதொடர்பாக பேச தொலைபேசியில் அழைத்தபோது, இதே கருத்தையே மீண்டும் வலுப்பட பேசினார்.. ஆக, பாஜக உடனான கூட்டணியால், தான் திமுக பக்கம் நகர்வேன் என்ற யூகத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்து முடித்துள்ளார் ஜெயக்குமார்.. என்றுமே எம்ஜிஆர் மாளிகைதான்.. ஒருபோதும் அறிவாலயம் பக்கம் செல்ல மாட்டேன் என்ற அவரது விளக்கத்தால், அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.