ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் பகுதியிலும், அரைமலை எனப்படும் பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அன்று மலையில் பக்தர்களை அனுமதிப்பது பாதுகாப்பானதா எனக் கேள்வி எழுந்த நிலையில், 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது.
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை கொண்டு செல்லும் மலைப்பாதை சேறும் சகதியுமாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்பாதை முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிப்பது கடினம் எனவும், அக்குழுவினர் கூறியுள்ளனர்.
நிபுணர் குழுவின் அடிப்படையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நிலச்சரிவு ஏற்பட்டதால் 2500 பக்தர்கள் தீபத் திருவிழாவிற்கு மலையில் ஏறும்போது அது பாதுகாப்பானதாக இருக்குமா? மலை ஸ்திரத்தன்மையோடு இருக்குமா? நிலச்சரிவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புகள் இருக்குமா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஆணையாளர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்ணியல் துறை தலைவர், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மண்டல இணை இயக்குநர் உள்ளிட்ட 8 நபர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய வந்துள்ளது.
முதற்கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தோம். அந்த குழு மலையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வின் முடிவில் பக்தர்களை அனுமதிப்பது பாதுகாப்பானதாக இருக்குமா? என்பது குறித்தான விரிவான ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். அதனடிப்படையில், முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வரும் 13ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் குவிய உள்ளனர். ஆனால், புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா அல்லது மலையில் அனுமதிக்கப்படவுள்ள பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.