விஜய் பரப்புரை கரூர் pt web
தமிழ்நாடு

"கூட்டம் அளவு கடந்தபோது பரப்புரையை நிறுத்தாதது ஏன்?" - தவெகவுக்கு நீதிமன்றம் கேள்வி

விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பரப்புரையை நிறுத்தாதது ஏன் எனவும் வினவியுள்ளது.

PT WEB

விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பரப்புரையை நிறுத்தாதது ஏன் எனவும் வினவியுள்ளது.

தவெக கரூர் பரப்புரை

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மதியழகன் மற்றும் மாசி பவுன்ராஜ் ஆகியோர், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தாங்கள் கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததோடு, குறுகிய இடமான வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் செய்ய கட்டாயப்படுத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது என வாதிட்டனர். மேலும், 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எண்ணியதாகவும், இவ்வளவு கூட்டம் வருமென எதிர்பார்க்கவில்லை என்றும், காவல்துறை தரப்பில் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் வாதத்தை முன்வைத்தனர்.

அரசுத் தரப்பில், தவெகவினர் அனுமதி கேட்ட பகுதிகளில் சிலைகள், பெட்ரோல் நிலையம் உள்ளதால் அனுமதி வழங்கவில்லை என்றும், தவெக பொதுச் செயலர் ஆனந்த் ஒப்புதலுடன், இடத்தை காட்டியே பிறகே அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், அனுமதிக்காத பாதையில் விஜய் வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை தவெகவினர் முறையாக பின்பற்றவில்லை எனவும் அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கரூர் மாவட்ட நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், விஜய் டாப் ஸ்டார் என்பதால், அவர் வந்தாலே அது மாநாடுதான் என்றும், அப்படி இருக்கையில் எப்படி 10 ஆயிரம் பேர் மட்டும் வருவார்கள் என கணித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். விஜயின் பிரசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என வினவிய நீதிபதி, கூட்டம் அளவு கடந்து சென்றது தெரிந்தும், நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை எனவும் தவெக தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மனசாட்சி படிதான் உத்தரவு பிறப்பிப்பேன் என தெரிவித்த நீதிபதி பரத்குமார், கைதான தவெக நிர்வாகிகள் இருவரையும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.