தேர்தல் தோல்விக்குப் பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பைச் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தவெக 108 இடங்களைப் பெற்று தனிக்கட்சியாக உருவானது. எனினும், பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அதற்கான பெரும்பான்மையையும் நேற்று நிரூபித்தது. அதிமுக உட்கட்சிப் பூசலால் மேலும் தவெகவுக்கு 25 ஆதரவு வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில், தேர்தலில் தோல்வியுற்ற கட்சித் தலைவர்கள் பலரும் ஊடகங்களைச் சந்தித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் அரணையூரிலுள்ள அவரது நினைவிடத்தில், சீமான் அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கமால் சென்றார்.
முன்னதாக, மதுரை விமான நிலையம், காரைக்குடி மற்றும் இளையான்குடியிலும், சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார். இதுகுறித்து விசாரித்தபோது, முதல்வர் அதிகாரபூர்வமாகச் செய்தியாளர்களை சந்தித்தபிறகே, இனி ஊடகங்களைச் சந்திக்க சீமான் முடிவெடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 4 சதவீதமாக சரிந்தது. காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியைத் தழுவினார். பல வருடங்களாக கடினமாக உழைத்து, தனித்துப் போட்டியிட்டு தனிப்பட்ட வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்த நிலையில், தற்போதைய தோல்வி நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.