பிரதமர் மோடி இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி ஓரளவுக்கு உருவம் பெற்று இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும், இப்போதைய நிலையிலேயே திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டிதான் தேர்தலில் நிலவும் என்பதை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. விவரத்தை இங்கே பார்ப்போம்!
தமிழகத்தில் கடைசியாக நடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றதை அறிவோம். ஆனால், அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிட்டாலேகூட வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்பதையே வாக்கு வங்கி புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
மக்களவைத் தேர்தலில் திமுக 26.93 சதவிகித வாக்குகளை பெற்றது. அந்த கூட்டணியில் காங்கிரஸுக்கு 10.67 சதவிகிதமும், இடதுசாரிகளுக்கு 4.77 சதவிகிதமும், விசிகவுக்கு 2.25 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்திருந்தன. மதிமுக 1.28 சதவிகிதம், முஸ்லிம் லீக் 1.17 சதவிகித வாக்குகளைப் பெற்றன. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தாலும், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இன்றியே போட்டியிட்டது. அதில், அதிமுகவுக்கு 20.46 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதேபோல, பாஜகவுக்கு 11.24, பாமகவுக்கு 4.33, தமிழ் மாநில காங்கிரஸுக்கு 0.94, அமமுகவுக்கு 0.90 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.
இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 46.9 சதவிகித வாக்குகளையும், அதிமுக - பாஜகவுக்கு 38.74 சதவிகித வாக்குகளும் குவித்திருந்தன. இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 8.16 சதவீதம் ஆகும். அப்படி பார்த்தால், கூட்டணியில் கூடுதல் கட்சிகள்; அதற்கேற்ற வாக்கு வங்கி என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியைக் காட்டிலும் திமுக கூட்டணிக்கு 8% வாக்குகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது திமுகவுக்கான அனுகூலம் எனலாம்.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் வரலாற்றுரீதியாக சட்டமன்ற தேர்தல்களில் சராசரியாக ஆட்சிக்கு எதிராக திரும்பும் சுமார் 5 சதவிகித வாக்குகள் திமுகவுக்கான பெரும் சவால். இந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்கான ஒரு பெரும் வாய்ப்பு. இந்த இரு கூட்டணிகளை மட்டும் கணக்கிட்டால், இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 3 சதவிகிதம் ஆக குறைந்துவிடும். போட்டியை இது கடுமையானதாக மாற்றும். அந்த வகையில் ஒன்றரை சதவிகித வாக்குகூட ஆட்சியைத் தீர்மானிக்கும் என்பதால்தான், சீமான், பிரேமலதா, ஓ. பன்னீர்செல்வம், ராமதாஸ் ஆகியோரெல்லாம் இம்முறை பெரும் முக்கியத்துவம் பெறுவார்கள்.
2026 தேர்தலை பொறுத்த அளவில் மிகப் பெரிய கேள்விக்குறி, ' விஜய் என்ன ஆவார்... ஆட்டக் குலைப்பர் ஆவாரா; ஆட்ட தீர்மானிப்பாளர் ஆவாரா?'; விஜயின் தாக்கம் என்ன செய்யும் என்பதாகும். பல கணிப்புகளும், கணிசமான வாக்குகளை விஜய் பெறுவார் என்று சொல்லும் நிலையில், தவெக-வால், திமுக - அதிமுக இரண்டு முகாம்களில் யாருக்கு பெரும் பாதிப்பு என்ற கேள்வி எழுகிறது. அப்படி பார்த்தால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள், இளைஞர்கள், பெண்கள் வாக்குகள் விஜய்க்கு செல்வது, சென்ற தேர்தலில் இந்த வாக்குகளில் கணிசமானவற்றை வாங்கிய திமுகவுக்கு சறுக்கலாகும். அதேபோல், ஆட்சிக்கு எதிரான வாக்குகள், திமுக பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தவெகவிற்கு செல்லும் சூழல் இருப்பது அதிமுகவுக்கு சவாலாக மாறும். எப்படி பார்த்தாலும் இந்த தேர்தல் மிகுந்த சுவாரசியமும் கடுமையான போட்டியும் நிலவும் ஒரு தேர்தலாகவே இருக்கும்!