ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதையொட்டி பல்வேறு இடங்களில் மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இரவில் மிதமான மழை பெய்தது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட இடங்களில் தரைக்காற்று பலமாக வீசியதால் குளிர்ந்த சூழல் நிலவியது.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுவட்டார தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், புயல் காரணமாக கல்பாக்கத்தில் இருக்கும் அணுமின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், ஆரோவில், கோட்டகுப்பம் கடற்கரை சாலைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.
கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கடலூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 222 நீச்சல் வீரர்கள் மற்றும் 26 பாம்புபிடி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஜேசிபி வாகனங்கள், 12 பொக்லைன் மற்றும் ரப்பர் படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டு பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, ஃபெஞ்சல் புயலையொட்டி வண்டலூர் பூங்கா நாளை செயல்படாது என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் யாரும் பூங்காவிற்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.