EPS அமித் ஷா மீட் முகநூல்
தமிழ்நாடு

EXCLUSIVE | EPS ~ அமித் ஷா மீட்... நடந்தது என்ன?

இவ்வளவு குழப்பம் இருப்பதால் அதிமுகவின் இரட்டை இலையை முடக்கினால் சரியாக இருக்கும் என நீதிமன்றத்தில் வாதிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: இராமானுஜம்.கி

எக்காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது என்ற முடிவில் இருந்து அதிமுக பின் வாங்கியதன் பின்னால் இரு வேறு காரணங்கள் இருப்பதாக அரசியல் உற்றுநோக்கர்கள் கருதுகிறார்கள். அதிமுகவின் இரட்டை இலை முடக்கும் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக கையில் எடுத்திருப்பதாகவும், அதேபோல் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் மீதான வழக்குகளை மத்திய அரசு தூசு தட்ட முடிவு செய்திருப்பதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது குடும்பத்தினர் மீதான வழக்குகளை சட்ட வல்லுனர்களை கொண்டு உடைத்தெறிந்து விடலாம் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருந்தாராம்.

ஆனால், அவருக்கு இடியென இறங்கியது இரட்டை இலை முடக்கப்படும் என்ற சேதிதான் என்கிறார்கள் பாஜக டில்லி வட்டாரங்கள். இதுகுறித்து விசாரித்தபோது, அதிமுக சட்டவிதிப்படி 2015ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் கார்டை புதுப்பித்து இருக்க வேண்டும். அது அப்போது நடைபெறவில்லை, இரண்டாவதாக அனைத்து அதிமுக உறுப்பினர்களாலும் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தாம் சிறை செல்லும் முன் அக்கட்சியின் பொருளாளராக இருந்த ஓபிஎஸ்ஸை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் கட்சியில் உறுப்பினராக சேர்த்தபோது, ஓபிஎஸ் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யவில்லை. இதனால் அவர் புதிய உறுப்பினராகவே கருதப்பட வேண்டும். ஐந்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்தால் மட்டுமே ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் நீடிக்க முடியும். அதுமட்டுமின்றி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடவில்லை. இவ்வளவு குழப்பம் இருப்பதால் அதிமுகவின் இரட்டை இலையை முடக்கினால் சரியாக இருக்கும் என நீதிமன்றத்தில் வாதிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரப்பினர் அதிமுக எம்.பி.,களுக்கு கசிய விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீண்ட சிந்தனைக்கு பிறகே அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் இணைந்து சந்தித்துள்ளார். மேலும் தமது மகன் மிதுன் வழக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆட்டம் காண வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் I.S.இன்பதுரையிடம் கேட்டபோது, " தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க.ஸ்டாலினா, எடப்பாடியாரா என்ற பேச்சே தேர்தலில் எடுபடும். அதுமட்டுமில்லாமல் இரட்டை இலை யாருக்கு என்ற பிரச்சனை ஈரோடு இடைத்தேர்தலின்போது ஒரு முறை ஏற்பட்டது. அப்போது தற்காலிக தீர்வாக நீதிமன்றம் ஒரு உத்தரவிட்டது.

அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவருக்கிடையே யாருக்கு செல்வாக்கு உள்ளது என அறிய வேண்டும் என உத்தரவிட்டார். அதில் எடப்பாடியாருக்கே கட்சி நிர்வாகிகள் முழு ஆதரவை தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரே அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல பல வழக்குகளில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நாங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறோம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29Aவின் படி, ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடக் கூடாது. சின்னங்கள் ஒதுக்கீடு விதி 15ன் ஒரு கட்சி இரு செங்குத்தாக உடைந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்க முடியும். அதிமுகவை பொறுத்தவரை 4 மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்று பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். 68 Mlaக்களில் 64 பேர் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக எங்களை பணிய வைத்தது என்பது கட்டுக்கதை. உண்மையில் திமுகதான் ஓபிஎஸ் போன்றவர்களை இயக்குகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை பொதுக்குழு முடிவு செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அதனை தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டிலும் வெளியிட உத்தரவிட்டது.

Delimitation தொடர்பாக திமுக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. அப்போது எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்மான நோட்டீசில் தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். நாங்கள்தான் அதே எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள 7.18 % தொடர வேண்டும் என்ற முக்கியமான கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இல்லையெனில் திமுக இதிலும் மாநில நலனை கோட்டை விட்டியிருக்கும். இதுபோன்ற விஷயங்களுக்காக மத்திய அரசிடம் அதிமுக உரிமையுடன் போராடி பெற்றுத் தரும்.

ஆட்சி பறிபோய்விடும் என்ற எண்ணத்தில் திமுக எங்களை கண்டு அஞ்சுகிறது. நாங்கள் யாரையும் கண்டு அஞ்சவில்லை" என்றார் இன்பதுரை.