Headlines|அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி முதல் பாரதிராஜாவின் மகன் மறைவு வரை!
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை 2 மணி நேரம் சந்தித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல்.
2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார். நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் கார்த்தி, மாரி செல்வராஜ், பேரரசு, தியாகராஜன், சினேகன், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி.
பல திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் மனோஜ் என முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல்.
மனோஜ் உயிரிழந்ததை இன்னும் நம்ப முடியவில்லை என நடிகர் நாசர் உருக்கம்.
எனது நண்பனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என இரங்கல் வீடியோ வெளியிட்ட இளையராஜா.
மகாகவி பாரதியார் எட்டையபுரத்தில் வாழ்ந்த வீட்டின் முன்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிந்த போது கீழே யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் வீடியோ வெளியிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? என மாவட்ட ஆட்சியர், தமிழக காவல் துறை இயக்குநர் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.
தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தியை, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்து உத்தரவு.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதோதரர் அசோக்குமாருக்கு சம்மன். வரும் 9ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்ப்பு.
வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நடப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார்.
வங்கதேசத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி என பரவும் தகவல்கள். வதந்தி என ராணுவம் மறுப்பு.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 55% பொருட்களுக்கு வரியை குறைக்க இந்தியா முடிவு எனத் தகவல். பரபஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை வரும் 2ஆம் தேதி தொடங்கும் நிலையில் சிக்கல்களுக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிரம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரபரப்பான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப். 97 ரன் குவித்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்ட நாயகன்.