கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை web
தமிழ்நாடு

“ரத்த வெள்ளத்தில் கிடந்தார்” - ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்தது என்ன? உதவி செய்தவர் கொடுத்த விளக்கம்!

வேலூரில் ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திருப்பூரில் இருந்து திருப்பதிக்கு நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த 4 மாத கர்ப்பிணி பெண், பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜை (30) ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நாளில் என்ன நடந்தது என்பது குறித்து கர்ப்பிணிக்கு உதவிசெய்த பெண் பேசியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தார்..

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு லதா என்பவர் உதவிசெய்துள்ளார். சம்பவத்தின் போது என்ன நடந்தது என்று லதா விளக்கமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், ”எங்களுடைய வீடு அருகில் தான் இருக்கிறது. கேங்மேன் திடீரென வந்து யாரோ ஒரு பெண் விழுந்து கிடக்கிறார், தண்ணீ வேணும் என கேட்டார். நானும் கூடவே போய் பார்த்த போது, பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கை, கால் உடைந்து காணப்பட்டார். பின்னர் அவரது கணவருக்கு போன் போட்டு பேசினோம், அவர் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்ததால் வாந்தி எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து அந்த பெண்ணிடம் கேட்டோம்.

அதற்கு அந்தப் பெண் ஒரு பையன் என்னை ரயில் பெட்டியில் இருந்து அடித்து தள்ளி விட்டான் என இரண்டு முறை பதட்டத்தோடு கூறினார். அதன் பிறகு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்தது அவர்களிடம் இருந்த பொருட்களை வைத்து கட்டு போட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதை பார்த்த போது எனக்கு பரபரப்பாகவும் பதட்டமாகவும் ஆகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.