அன்புமணி, ராமதாஸ் pt
தமிழ்நாடு

ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை மோதல்.. உண்மையில் என்ன நடந்தது? பாமக எம்எல்ஏ விளக்கம்!

பாமக இளைஞரணி தலைவரை நியமிப்பதில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டிருப்பது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திவ்யா தங்கராஜ்

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமைந்துள்ளது.

அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்” என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, “என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்” என சொல்லி எழுந்துச் சென்றார்.

இதனை தொடந்து நிர்வாகிகள் யார் பக்கம் செல்வதென அறியாமல் குழப்பத்தில் நின்றனர். இந்த சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

என்ன நடந்தது?

இருவருக்குமிடையேயான பூசல் மேடையில் வெளிப்பட்டது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எம்எல்ஏ அருள், “இது முழுக்க முழுக்க தவறான தகவல், பத்திரிகையால் சித்தரிக்கப்பட்டவை இவை. ‘பனையூரில் அலுவலகம் உள்ளது. அங்கு தன்னை சந்திக்கலாம்’ என அன்புமணி கூறியது இன்று திடீரென அறிவிக்கப்பட்டது கிடையாது. பனையூர் அலுவலகம் முன்பில் இருந்தே உள்ளது. பாமக பொறுப்பாளர்களை சந்திப்பதற்காக அந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது” என விளக்கம் கொடுத்தார்.

ramadoss and anbumani

மேலும், “முகுந்தனின் நியமனம் குறித்து அன்புமணி மற்றும் ராமதாசுக்கு கருத்து வேறுபாடுகளே இல்லை. ஒரு இயக்கத்தில் ஒரு விஷயம் குறித்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், வேறுபாடுகளோ முரண்பாடுகளோ இங்கு பாமகவில் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு குடும்பமாக இயங்கி வருகிறது. எந்தவித சர்ச்சைகளுக்கும் இங்கு இடம் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இரண்டரை கோடி வன்னியர்கள் மட்டும் அல்லாது, அனைவரையும் ஒன்றிணைந்து வழிநடத்தி வந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு இயக்கம் பாமக. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்ப்பவர்கள் ராமதாஸ் அவர்களும், அன்புமணி ராமதாஸ் அவர்களும்.

anbumani

இன்று நடந்திருக்கக்கூடியது ஒரு சலசலப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று மாலைக்குள் அனைத்தும் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அன்புமணி அவர்களும், ராமதாஸ் அவர்களும் ஒருவராக தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் என நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்” என பாமகவில் நடந்த பூசல் குறித்து அந்த கட்சியின் எம்எல்ஏ அருள் புதியதலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.